ETV Bharat / state

தேர்தலின்போது கசப்பான அனுபவங்கள் - திமுகவில் இருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவிப்பு

"ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு கை கொடுத்தவர் அண்ணன் முத்துசாமி. அவர் என் மீது எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியோ, நெருக்கடியோ கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை" என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

தோப்பு வெங்கடாசலம் - செய்தியாளர் சந்திப்பு
தோப்பு வெங்கடாசலம் - செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 4:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.தேர்தலின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் தோப்பு வெங்கடாசலம். இதற்கு முன்பாக, அதிமுகவில் வருவாய்த் துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாசலத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு வழங்கபடவில்லை. இதனால், அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் உடன் திமுகவில் இணைந்தார்.

இதையும் படிங்க.. பா.ஜ.க-வை விட எங்களை அதிகம் தாக்குவது ஏன்? தி.மு.க-வின் அணுகுமுறை குறித்து வன்னி அரசு கேள்வி

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில், பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் பெருந்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையி்ல், " திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்ளும் கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க இருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து மாவட்டக் கழக பொறுப்பாளராகவும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

​ஆனால், சட்டப்பேரவை தேர்தலின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் திமுகவில் பயணிக்க என் மனம் இடம்கொடுக்காத காரணத்தால், எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

இப்போதைக்கு எந்த இயக்கத்திற்கும் செல்லக்கூடிய எண்ணம் எனக்கு இல்லை. நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தவறான செய்தியை சில ஊடகங்கள் ஒருவார காலமாக பரப்பி வந்தார்கள். ஒதுங்கும் அளவுக்கு நான் பற்றற்றவனும் கிடையாது; ஒதுக்கப்படுகிற அளவுக்கு நான் சத்தற்றவனும் கிடையாது. தற்போதைக்கு எந்த இயக்கத்திலும் சேருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு அந்த மனநிலையில் நான் இல்லை.

இதையும் படிங்க.. ‘முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை கனவில் கூட இருக்காது’ - வைகோ கருத்து

முன்னாள் அமைச்சர் முத்துசாமியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர். மிக மூத்த அரசியல்வாதி. அவர் அமைச்சராக இருந்த காலத்தில் நான் கல்லூரி மாணவர் தலைவராக இருந்து, அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்து பயணித்தேன்.

ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு கை கொடுத்தவர் அண்ணன் முத்துசாமி. அவர் மீது எனக்கு என்றைக்கும் அளவுக்கு அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறது. அவர் என் மீது எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, நெருக்கடியோ கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூறுவதற்கு நான் விரும்பவில்லை" என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.