ETV Bharat / state

பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்: மாநில அரசு பதிலளிக்க மதுரை அமர்வு உத்தரவு

பைக் டாக்ஸி சேவை தமிழ்நாட்டில் உரிய திட்டமோ, விதிமுறைகளோ இல்லாத காரணத்தினால் அவற்றின் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 10:37 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைக்கு சட்டப்படி உரிமம் வழங்கி விதிமுறைகள் உருவாக்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் மனு குறித்து மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிற்கு அனுமதி அளித்து விதிமுறைகளை வகுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “தமிழ்நாட்டில் ராப்பிடோ, ஓலா, உபர் போன்ற தனியார் டிஜிட்டல் மைய பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்க கூடிய வகையிலேயே உள்ளன. ஆனால், இந்த சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டமோ, விதிகளோ தமிழ்நாடு அரசிடம் இல்லை.

ஆட்டோ ரிக்சா, டேக்ஸிகளைப் போல பைக் டேக்ஸி சேவைகள் தனித்து இயங்க முடியாது. அவை முழுமையாக சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களை சார்ந்துள்ளன. ஆனால், அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்த கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் டிஜிட்டல் தளத்தை இயக்கி வருகின்றன.

அதேசமயம், அந்த நிறுவனத்தின் டிஜிட்டல் தளங்களின் வழியாக பணி செய்யும் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதியப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: ரயிலை இயக்கிக்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி - சாதுர்யமாக செயல்பட்டு வண்டியை நிறுத்திய லோகோ பைலட்

எனவே, பைக் டாக்ஸிகளை ஒழுங்கு படுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்ஸி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதுவரை பைக் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இதுபோன்ற பைக் டாக்ஸி நடைமுறைக்கு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கு மாநில அரசு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்” என கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து மாநில அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.