ஆம்னி பேருந்தில் 40 சவரன் நகை திருட்டு - பயணி அசந்த நேரத்தில் 'பகீர்' சம்பவம்
காணாமல் போனதாக கூறப்படும் பை கிடைக்கவில்லை. இதையடுத்து பேருந்தை விடுவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published : August 29, 2026 at 4:35 PM IST
தூத்துக்குடி: கயத்தாறு அருகே தனியார் ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில் 40 சவரன் நகை வைக்கப்பட்டிருந்த பை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்த சென்னைக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் தினமும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக ஹோட்டல்களில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதுண்டு. இதை சாதகமாக பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருவது அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் திருநெல்வேலி பொதிகை நகரச் சேர்ந்த ஜஸ்டின் (வயது 56) மற்றும் அவரது மனைவி ஹீலியம் ஆகியோர் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கரிசல்குளம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவருந்த பேருந்தை நிறுத்தி உள்ளனர். அப்போது ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி ஹீலியம் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக தாங்கள் கொண்டு வந்த பையை இருக்கையில் வைத்து விட்டு கீழே இறங்கி உள்ளனர்.
சிறிது நேரத்தில் இருவரும் பேருந்துக்கு வந்த போது அவர்கள் இருக்கையில் வைத்து சென்ற பை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் 40 பவுன் தங்க நகை மற்றும் உடைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
40 பவுன் தங்க நகை வைத்திருந்த பை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சக பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
ஆனால் காணாமல் போனதாக கூறப்படும் பை கிடைக்கவில்லை. இதையடுத்து பேருந்தை விடுவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த ஹோட்டலில் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

