'ஸ்பா-வை தொடர்ந்து நடத்தணுமா ரூ. 50 ஆயிரம் கொடு' -மிரட்டிய இரண்டு பெண் காவலர்கள் கைது
மறைந்திருந்த பார்த்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமுல் கையில் பணத்தைப் பெற்றதும், அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, எஸ்ஐ பாக்கியலட்சுமியையும் இந்த விவகாரத்தில் கைது செய்தனர்.

Published : July 2, 2026 at 8:26 PM IST
திருவள்ளூர்: அழகு நிலையம் மற்றும் ஸ்பா-வை தொடர்ந்து நடத்த ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக திருமுல்லைவாயில் காவல் நிலைய பெண் எஸ்எஸ்ஐ மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் எஸ்ஐ ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ஜெனிபர் (30). இவர், திருமுல்லைவாயிலில் உள்ள சிடிஎச் சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார். உரிய அனுமதி பெற்று இதனை அவர் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெனிபரின் அழகு நிலையம் அனுமதியின்றி நடந்து வருவதாகவும், குறிப்பாக, ஸ்பா என்ற பெயரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு புகார் ஒன்று சென்றதாக தெரிகிறது. இது குறித்து, கடந்த 20 ஆம் தேதி திருமுல்லைவாயில் காவல் நிலைய எஸ்ஐ பாக்கியலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார் வந்துள்ளது. ஆகையால், அழகு நிலையத்தை மூடி விட்டு காவல் நிலையம் வந்து பேசுமாறு போலீஸார் தரப்பில் ஜெனிபரிடம் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இது குறித்து பேசுவதற்காக ஜெனிபர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு மறுநாள் சென்றுள்ளார்.
அப்போது, அழகு நிலையம் மற்றும் ஸ்பா-வை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் மாதந்தோறும் ரூ. 50 ஆயிரம் தர வேண்டும் என எஸ்எஸ்ஐ அமுல் (50) கூறியுள்ளார். இதற்கு உடந்தையாக எஸ்ஐ பாக்கியலட்சுமி (40) இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஜெனிபர், வேறு வழியில்லாமல் நேற்று முன்தினம் (ஜூன் 30) திருமுல்லைவாயில் காவல் நிலையம் சென்று பேரம் பேசியுள்ளார்.
மேலும், 20 ஆயிரம் ரூபாய் மாமுல் தருவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், லஞ்சம் தர விருப்பமில்லாத ஜெனிபர், இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேற்று நேரில் சென்று புகார் அளித்தார். புகாரின் படி, டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை ஜெனிபரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, நேற்று பிற்பகல் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் வந்த ஜெனிபர், அந்த பணத்தை எஸ்எஸ்ஐ அமுலிடம் கொடுத்தார். இதை மறைந்திருந்த பார்த்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமுல் கையில் பணத்தைப் பெற்றதும், அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, எஸ்ஐ பாக்கியலட்சுமியையும் இந்த விவகாரத்தில் கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் பெண் போலீசார் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் ஆவடி போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

