ETV Bharat / state

திருவண்ணாமலை கோயிலில் புகைப்படம் எடுக்க முயற்சி - தெலங்கானா பக்தர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

செப்.01 முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிய அதிகாரி
தெலங்கானா பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிய அதிகாரி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 5:43 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயில் கருவறையில் புகைப்படம் எடுக்க முயன்ற தெலங்கானா பக்தர்கள் இருவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களாக பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வெளிமாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுப்பதும், ரீல்ஸ் எடுப்பதும் தொடர் கதையாகியுள்ளது.

இதையடுத்து, வரும் செப்.01- ஆம் தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், செல்போன்களைப் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நான்கு பிரதான கோபுரங்களிலும் ஐந்து செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த அகில்குமார் மற்றும் வெங்கடரெட்டி ஆகியோர் அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த கேமரா பொருத்திய கண் கண்ணாடியில் இருந்து மின் விளக்கு எரிந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள், இருவரையும் பிடித்து கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் வைத்திருந்த கண் கண்ணாடிகள் மற்றும் செல்போன்களை வாங்கி காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் எந்தவிதமான கோயில் கருவறை படங்களும் இல்லாததால் அகில்குமார் மற்றும் வெங்கடரெட்டி ஆகிய இருவர் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு, கோயில் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதை மீறி கேமரா பொருத்திய கண் கண்ணாடி மூலம் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை புகைப்படம் பிடித்த இருவரை போலீசார் கண்டறிந்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்தில் 40 சவரன் நகை திருட்டு - பயணி அசந்த நேரத்தில் 'பகீர்' சம்பவம்