"மொபைல் போனை வீட்டிலேயே வைத்து விட்டு வாருங்கள்" - கோயில்களில் அதிகரிக்கும் கூட்டத்தால் அமைச்சரின் ஆலோசனை
52 கோயில்களில் மொபைல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோயில்களுக்கும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Published : September 2, 2026 at 3:49 PM IST
சென்னை: கோயில்களில் மொபைல் போன்களை பாதுகாக்க, போதுமான அளவில் மொபைல் போன் கவுண்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், 01-09-2026 அன்று முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரீல்ஸ் போடுவதை தடுக்க நடவடிக்கை
ஏற்கெனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் இராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் இருந்து வருகிறது. திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
சிலர் திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பக்தர்களின் வழிபாட்டு அனுபவம் பாதிக்கப்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையிலும், திருக்கோயில்களின் பாரம்பரியத்தையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொபைல் போன் பாதுகாப்பு கவுண்ட்டர்கள்
மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் மொபைல் போன் பாதுகாப்பு கவுண்ட்டர்கள் மற்றும் பாதுகாப்பு லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கவுண்ட்டர்களை செயல்படுத்துவதற்காக தனி ஊழியர்கள், பாதுகாப்பு லாக்கர்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டணம் ரூ. 5 மட்டுமே
மொபைல் போன்களை பாதுகாப்பதற்கான நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் மொபைல் போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.5 கட்டணமும் திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல. மொபைல் போன்களை பாதுகாப்பாக பெற்றுக்கொண்டு, முறையாகப் பராமரித்து, பக்தர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே இந்த குறைந்தபட்சக் கட்டணம் பெறப்படுகிறது.
எதிர்காலத்தில் பிற கோயிலுக்கும் விரிவுப்படுத்தப்படும்
தற்போது 52 முதுநிலைத் திருக்கோயில்களில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய திருக்கோயில்களுக்கும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும். எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றும் வகையில் ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்
மொபைல் போன் தடை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சில திருக்கோயில்களில் மொபைல் போன் பாதுகாப்பு கவுண்ட்டர்களில் பக்தர்கள் அதிக அளவில் வரிசையில் நிற்பதால், கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்தந்த திருக்கோயில்களின் தேவைக்கேற்ப போதுமான அளவில் மொபைல் போன் கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில், தேவைக்கேற்ப கூடுதல் கவுண்ட்டர்களை அமைப்பது குறித்து அந்தந்த திருக்கோயில் நிர்வாகங்கள் முடிவெடுத்து செயல்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொபைல் போனை பாதுகாப்பாக வைத்து விட்டு வரலாம்
பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தக் காத்திருப்பு நேரத்தை பெருமளவில் தவிர்க்க முடியும். திருக்கோயிலுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளிலேயே மொபைல் போன்களை வைத்துவிட்டும், வெளியூரில் இருந்து வருபவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் மொபைல் போன்களை வைத்துவிட்டும், நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களில் மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டும் திருக்கோயிலுக்குள் செல்லலாம்.
இதன் மூலம் மொபைல் போன் கவுண்ட்டர்களில் வரிசையில் நின்று மொபைல் போனை ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பக்தர்களின் நேரமும் மிச்சமாகும். திருக்கோயில் வளாகங்களில் தேவையற்ற கூட்ட நெரிசலும் குறையும். வாகன வசதியோ அல்லது மொபைல் போனை வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு வருவதற்கான வசதியோ இல்லாத பக்தர்கள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் வாகனம் இல்லாமல் வருபவர்கள், திருக்கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கவுண்ட்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
| இதையும் படிங்க.. தமிழ்நாட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் - அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த 'அப்டேட்' |
சாதாரண கைபேசிகளுக்கு எவ்வித தடையும் இல்லை
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகள் திருக்கோயிலுக்குள் எடுத்துவர எந்தவித தடையும் இல்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்
கோயில்களில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும் பக்தர்களின் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தவும், அமைதியான வழிபாட்டுச் சூழலை உருவாக்கவும், நமது திருக்கோயில்களின் பாரம்பரியம், புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசும், பொதுமக்களும் இணைந்துதான் இதுபோன்ற நல்ல மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எனவே, திருக்கோயில்களில் பக்தர்களின் அமைதியான வழிபாட்டிற்கும், கோயில்களின் பாரம்பரியத்தையும் புனிதத்தன்மையையும் பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

