ETV Bharat / state

''திருப்பரங்குன்றம் தீப வழக்கு'' - உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக அனல் பறந்த வாதம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் சரி. தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி? ஹைகோர்ட்டுக்கு வெளியேவும் தூண் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்றம் மலை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 15, 2025 at 10:15 PM IST

3 Min Read
Choose ETV Bharat

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் 2 ஆவது நாளாக இன்று அனல் பறக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.

நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி, ''தீபம் ஏற்றுவது தொடர்பான முழு அதிகாரமும், உரிமையும் கோயில் நிர்வாகத்திற்கே உள்ளது. ஆகம விதி மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களுக்கு உட்பட்டே கோயில் நிர்வாகம் செயல்பட வேண்டும்.

தீபம் ஏற்றுதல் தனிநபரின் உரிமை அல்ல. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகம விதிகளின்படி தீபமேற்றும் நடைமுறை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கோயில் மரபுகள் மற்றும் வழிபாட்டு முறையை தனிநபர் கோரிக்கைக்காக மாற்ற முடியாது. மலை மீது தீபம் ஏற்றுவது கோயில் சார்ந்த ஆகம நடைமுறை என்பதால், அதை வீட்டு தீபம் போன்று கருத முடியாது.

ஆகம விதிகளை மீறி கோயிலை கட்டாயப்படுத்த முடியாது. மேலும் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என, 2021 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தனிப்பட்ட கருத்துகள் இடம் பெற்றுள்ளன. கோவில் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதம் முறையாக பரிசீலிக்கப்படவில்லை. இந்த விவகாரம் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும்'' என தேவஸ்தானம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர் வாதங்களை முன்வைத்தார்.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி, ''திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தூண்களில் நாயக்கர் கால அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ஆகம விதிகளுக்கும் வரலாற்றுச் சான்றுகளுக்கும் உட்பட்டவையாக இருக்கின்றன. மலை உச்சியில் இருப்பதாக கூறப்படும் தூணில் எந்த எழுத்தோ, அடையாளமோ இல்லாததால் ஆகம விதிகளின் படி தீபத்தூணாக கருத முடியாது.

நாயக்கர் காலத்தில் இருந்தே ஒரே இடத்தில் தீபமேற்றல் நடைபெற்று வருகிறது. அதற்கான தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் போதுமான அளவில் உள்ளன. கார்த்திகை தீப திருவிழா கோவில் சன்னதிக்கு மேலே, சுவாமிக்கு பின்பக்க எதிரே நேராக ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது. மனுதாரரின் மனுவால் பாரம்பரிய நடைமுறையில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சமணர்கள் பழங்காலத்தில் மலை உச்சிகளில் விளக்கு தூண்களை வெளிச்சத்திற்காகப் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரையை சுற்றியுள்ள மலைகளில் சமணகால சான்றுகள் ஏராளமாக உள்ளன. வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனிவாசன் எழுதிய 'சமணமும் தமிழும்' என்கிற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் சரி. தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி? ஹைகோர்ட்க்கு வெளியேவும் தூண் உள்ளது. முருகனுக்கு இரு மனைவிகள் இருக்கலாம். என்றாலும் கார்த்திகை தீபத்தை இரு தீபங்களாக ஏற்ற சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.

வைஷ்ணவத்தில் வடகலை–தென்கலை பிரச்சனை இருப்பதைப் போலவே திருப்பரங்குன்றத்தில் கூட மனுதாரர் பிரச்சனையை உருவாக்கியுள்ளார். எது எவ்வாறாக இருந்தாலும், அறநிலையத் துறை சட்டம் வகுத்த விதிகளின் படியே, கோவிலில் அனைத்து வழிபாடும் நடைபெறுவதாகும். மனுதாரர் மனுவில் கூறியவை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும். இந்த கோவில் பாரம்பரிய நடைமுறையை ஏற்கெனவே நிர்ணயித்த விதிகளுக்கு எதிராக மாற்ற முடியாது.'' என்றார்.

இதைத்தொடர்ந்து, ''9 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்படும் விளக்கு பள்ளம் தற்போதைய தூண்களுடன் தொடர்புடையதா?'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே தர்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன், ''தனி நீதிபதி உத்தரவுகளையும், விசாரணை முறையையும் கடுமையாக விமர்சித்தார். தங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் மூன்று நாட்களுக்குள் விசாரணை முடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இது இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் வாதிட்டார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வாதங்களை முன்வைக்க முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் தங்கள் சட்ட உரிமைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனி நீதிபதி உத்தரவுகளில் கோவில் சொத்துகளை தர்கா தரப்பு அபகரிப்பது போன்ற கருத்துகள் இடம் பெற்றிருப்பது ஏற்க முடியாதது என்றும், மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதி போன்ற அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் தர்கா தரப்பு குற்றம்சாட்டியது. மேலும் 2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவையே மீண்டும் தாக்கல் செய்துள்ளதாகவும், மலையில் ஏற்கெனவே பல தூண்கள் உள்ளதால் மனுதாரரின் கோரிக்கை மேலும் சிக்கலடைவதாகவும் வாதிடப்பட்டது.

அதேபோல் ஜமாத் தரப்பும் தனி நீதிபதி உரிய கால அவகாசம் வழங்காமல் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்ததாக குற்றம்சாட்டியது. தீபத்தூண் தொடர்பான உரிமை விவகாரம் முழுமையாக உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், அதற்கான தீர்வு சிவில் நீதிமன்றத்திலேயே பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: காளி சிலையால் கிராமத்தில் துர்சம்பவங்கள் - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு நிலையான தீர்வு அவசியம் என கருத்து தெரிவித்தனர். வக்பு வாரியம் மற்றும் காவல்துறை தரப்பில் நாளை தங்களது வாதங்களை முன்வைக்கலாம் என்றும், இனிமேல் எந்த இடையீட்டு மனுக்களும் ஏற்கப்படாது என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர். நாளையே அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.