இருவழி சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிகள் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
சுற்றுச்சாலை பணிகள் நிறைவு அடையாமல் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Published : October 10, 2026 at 10:49 PM IST
மதுரை: தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு வழிச்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமோகூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுதாகர் நாகராஜ் தாக்கல் செய்த மனுவில், "திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் (கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை) கடந்த பல ஆண்டுகளாக 2 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
திருச்சி அருகிலுள்ள திருப்பரைத்துறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பகுதியிலும், கரூர் மாவட்டம், மானவாசி கிராமத்திலும் (மயனூர்) இந்த சுங்க சாவடிகள் உள்ளன. விரிவுபடுத்தப்பட்ட இரண்டு வழிச்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. சுங்கச்சாவடிகள் நான்கு வழிச் சாலைகளில் மட்டுமே செயல்படுகின்றன.
ஆனால், இருவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.எனவே, இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை வழக்கறிஞர் தரப்பில், "முறைப்படி தான் சுங்க கட்டணம் வசூல் செய்கிறோம். எந்த விதி மீறலும் இல்லை" என வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில், "திருச்சி பஞ்சபூர் அருகே இருந்து அந்தநல்லூர் வரை புறவழிச் சுற்றுச் சாலை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணி பாதியிலேயே உள்ளது. சுற்றுச்சாலை பணிகள் நிறைவு அடையாமல் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது. எனவே சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், "விரிவாக்கப்பட்ட சாலையில் NH என்ற போர்டு வைத்தால் மட்டும் போதுமா?
சுங்க கட்டணம் வசூல் செய்து கொள்ளலாமா? இனி வரும் காலங்களில் விவசாய பொருட்கள் கொண்டு சென்றாலே சுங்க கட்டணம் வசூலித்து விடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு வழிச்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்கலாம் என உத்தரவுகள் உள்ளதா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

