பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பெரியார் புகைப்படம் அகற்றம்
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Published : February 28, 2026 at 4:13 PM IST
மதுரை: பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம் திடீரென அகற்றப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தே.ஜ கூட்டணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். அதற்காக, புதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மாலை 2.45 மணியளவில் மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரை வரும் பிரதமர் மோடி
மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, அங்கு அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ், ரூ.18.28 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள காரைக்குடி ரயில் நிலையம், ரூ.12.58 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள மணப்பாறை ரயில் நிலையம், ரூ.9.86 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள சோழவந்தான் ரயில் நிலையம், ரூ.8.84 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
மேலும், தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார். மேலும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் தே.ஜ கூட்டணி கட்சியினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக டி.டி.வி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், தமாகா ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்பாடுகள் தீவிரம்
மண்டேலா நகர் நகர் பகுதியில், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக காவல்துறை சார்பாக, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் 20-க்கும் மேற்பட்ட குழுவினர் வரவழைக்கப்பட்டு, மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தின் முகப்பில் பெரியார் அண்ணா படங்களை கொண்ட வளைவுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெரியார் படத்தை அங்கிருந்த நிர்வாகிகள் அகற்றினர்.
பலத்த பாதுகாப்பு

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பு வலையங்குளம் முதல் விரகனூர் ரவுண்டானா வரை மற்றும் விமான நிலையம் - அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலை வழியாக பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் நேரங்களில் பொதுவாகனங்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கனரக சரக்கு வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வரவுள்ளதால் சென்னை, புதுச்சேரி மற்றும் மதுரையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
| இதையும் படிங்க: ஒரே ஒரு சாலைக்காக நீண்டகாலமாக போராடி வரும் பழங்குடி மக்கள்! |
தடை விதிக்க மனு
இதுபோன்ற சூழலில், பிரதமர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு செல்லும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மற்றும் தீபம் தொடர்பான மத ரீதியான சிக்கல்கள் நீடித்து வருவதால், அந்த வருகை சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, மீனாட்சி அம்மன் கோயில், அழகர் மலை, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களுக்கு பிரதமர் செல்ல பரிந்துரைக்கலாம் என்றும் கோரப்பட்டுள்ளது.

