தூத்துக்குடி பனையூர் முன்னொரு காலத்தில் கடல் பகுதியா? பாண்டியர்களின் இருண்ட காலத்திற்கு விடை தேடும் தொல்லியல் ஆர்வலர்கள்
பனையூரில் கடல் சிப்பிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி 12,000 வருடத்திற்கு முன்பு கடலாக இருந்த இடம் இதுபோன்று அறியப்படுவதாக மத்திய விலங்கியல் துறை அதிகாரி சந்திரன் தெரிவித்தார்.

Published : January 6, 2026 at 10:44 PM IST
-By எம்.மணிகண்டன்
“காணாமல் போன குமரிக்கண்டத்தையும், பாண்டியர்களின் இருண்ட காலத்திற்கு விடை கிடைக்குமா? என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கற்பனை கதையாக மட்டும் உள்ள சில உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்” என சுவாரசியத்தை கிளப்பியுள்ளார் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகளவில் கொண்டு செல்வதற்காக கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழ்வாராய்ச்சிகள் போன்று பல முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. ஏனென்றால், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடி சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானது என்பதை தொல்லியல் துறை மூத்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா உறுதி செய்துள்ளார். மேலும், கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை மட்டும் வைத்து ஒரு அருங்காட்சியகமே உருவாக்கியுள்ளோம் என்றால் மிகையாது. கீழடி மூலம் உலகத்தையே நம்மை உற்றுப்பார்க்க வைத்துள்ளோம்.
அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், தோராயமாக கி.மு.3300 முதல் கி.மு.1300 காலத்தை சேர்ந்த செப்பு காலத்தைச் சேர்ந்த ஆயுத சிதைவு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல பொக்கிஷங்கள் பட்டினமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
அதாவது, தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் என்ற மீனவ கிராமத்தின் அருகே அமைந்துள்ளது தான் பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகள். தமிழக அரசால் தொல்லியல் தலமாக அறிவிக்கப்பட்ட பட்டினமருதூரில் பழமைவாய்ந்த செவ்வக வடிவிலான கிணறு, முதுமக்கள் தாழி, பழமையான ஓடுகள், எழுத்துக்கள், பண்டைய இரும்புகள், பண்டைய கால நாணயங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்டினமருதூர் அருகே உள்ள பனையூரில் நீர் மற்றும் நிலப்பரப்பு அடியில் புதையல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருப்பது தெரியவந்தது.

அதனால் இந்த பகுதியில் விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாற்று மற்றும் தொல்லியல் தளங்களை ஆய்வு செய்ய தீவிரமாக வலியுறுத்தி வரும் தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், தூத்துக்குடி-பட்டினமருதூர் சர்வே எண்கள் 200, 203, 204 மற்றும் தூத்துக்குடி-பனையூர் (குளத்தூர் தெற்கு கிராமம்) அணைக்கட்டு சர்வே எண்கள் 215, 435 ஆகியவற்றின் கீழுள்ள பகுதிகளில், கடலுக்கு அடியில் உள்ள கட்டமைப்புகள், சிப்பிகள் மற்றும் சங்குகள் போன்ற கடல் படிமங்கள் மற்றும் மிகப்பெரிய புதையல்கள் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.
புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மையை தொண்டி எடுக்கும் முயற்சியில், தமிழக அரசு மும்முரம் காட்டிவரும் நிலையில், இதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று எண்ணிய ஆட்சியர் இளம்பகவத், அந்த கடிதத்தை இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) இயக்குநர் ஆகியோருக்கு 2025 நவம்பரில் அனுப்பி வைத்தார். சாதாரணமாக இதுபோன்ற மனுக்கள் அரசு அலுவலகங்களில் முடங்கிவிட வாய்ப்புள்ளது. ஆனால், ஆட்சியரே நேரடியாக தலையிட்டிருப்பதால், மனுவை இந்தியாவின் உயரிய ஆய்வு மையங்களுக்கு பரிந்துரைத்திருப்பது ஒன்றும் சாதாரணம் அல்ல. இதன் தீவிரத் தன்மையை காட்டுவதை உணர்த்துகிறது.

இந்நிலையில், பனையூர் பகுதியை ஆய்வு செய்வதற்காக கொல்கத்தாவில் இருந்து மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபாஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோர் அடங்கிய விஞ்ஞானிகள் திங்கட்கிழமை (ஜன.5) தூத்துக்குடி வந்தடைந்தது. தொடர்ந்து, இன்று (ஜன.6) மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர்கள் நேரடியாக பட்டினமருதூர் அருகே உள்ள பனையூர் பகுதியில் கடல்சார் புதை படிமங்கள் மற்றும் படிவ பாறைகள் குறித்த முதல்கட்ட ஆய்வு களமிறங்கினர். அவர்களுடன் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இவர்களுடன் நமது ஈடிவி பாரத் ஊடகக் குழுவும் சேர்ந்து பயணப்பட்டது.
அந்த ஆய்வின் போது, அரியவகை சிப்பிகள் உள்ளிட்டவை கிடைத்தது. பனையூரில் சிப்பிகளை சேமித்த விலங்கியல் துறை அதிகாரிகள், பட்டினமருதூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு பொருட்களை சேமித்துள்ளனர். அதைப்பார்த்து ஆச்சரியமடைந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், பல வரலாற்று உண்மைகள் வெளிவரும் என அறிவுறுத்தினர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மத்திய விலங்கியல் துறை அதிகாரி ஆர்.சந்திரன், “கடலிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு நிலப்பரப்பில், 2023-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாறைகள் வெளியே தெரிந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய வந்தபோது, வியப்பூட்டும் பல விஷயங்கள் தெரியவந்தது. சுமார் 2 கி.மீ தூரம் ஆய்வு செய்தபோது, இப்பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
குறிப்பாக, 10-12 ஆயிரம் வருடத்திற்கு முன்பு இருந்த கடல் சிப்பிகள் மற்றும் பலதரப்பட்ட முத்துச் சிப்பிகளைக் கண்டெடுத்துள்ளோம். இந்த பகுதி கடலாக இருந்திருக்கிறது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக உள்ளது. இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம். அதற்காக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டால் வரலாற்று உண்மைகள் வெளியே வரும். அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லலாம்” என்றார்.
தொடர்ந்து பாண்டியர்களின் இருண்ட காலத்திற்கு விடை கிடைக்குமா? என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளதாக கூறினார் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி.
இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, “ஆழ்கடலில் இருப்பது போன்ற பல பொருட்கள் பட்டணமருதூருக்கு அருகே உள்ள பனையூரில் கிடைத்துள்ளது. குறிப்பாக, இப்பகுதியில் கண்டெடுத்த சிப்பிகள் கடல் பகுதியில் இருந்து வெளியிடத்திற்கே நகராது. அப்படிப்பட்ட முத்துச்சிப்பி பனையூரில் கிடைத்துள்ளது என்றால், இது கடலாக இருக்க வாய்ப்புள்ளது என்றுதான் அர்த்தம்.
| இதையும் படிங்க: இந்துக்களின் மயானத்தை சீரமைக்க முயற்சி எடுத்த இஸ்லாமியர்கள் - ரவணசமுத்திரத்தில் நெகிழ்ச்சி சம்பவம் |
மேலும், 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட ஒரு பாறை தென்பட்டது. அந்த பாறையை சுற்றி தோண்டத் தோண்ட ஆழம் சென்று கொண்டே உள்ளது. இதனால், பனையூர் பகுதியையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தன்பேரில், தற்போது ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடல் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
இதெல்லாம் நமது வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு கூடுதல் பலமே. காணாமல் போன குமரிக்கண்டம் போன்றவற்றையும் கண்டுபிடிக்கலாம். பாண்டியர்களின் இருண்ட காலத்திற்கு விடை கிடைக்குமா? என்ற அடிப்படையிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் புதையல் தேடும் வேட்டை அல்ல. கற்பனை கதையாக மட்டும் உள்ள உண்மையை அறிவியல் பூர்வமாகக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சி” என்றார் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ்.
தூத்துக்குடியில் பெய்த கனமழை வெள்ளத்தால் தான் இந்த இடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், பனையூர்-குளத்தூர், பட்டினமருதூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் கண்டெடுத்து ஆவணப்படுத்திய கடல்சார் புதைபடிமங்களின் எச்சங்களை, முன்கள ஆய்வு செய்து அறிக்கையாக ஜன.6, 7 ஆகிய தேதிகளில் மத்திய குழுவினர் சமர்ப்பிப்பார். இந்த தொல்பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது ஆய்வுகள் இருக்கும் என்பதும், அதைத் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

