அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டாலும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சபாநாயகர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால் அவரை பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது என சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Published : September 1, 2026 at 9:44 PM IST
சென்னை: அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை விதிகளின்படி ஏற்றாலும், சட்டப்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொறடா உத்தரவை மீறி, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையிலிருந்த போது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர், “இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா? என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை” எனக் குறிப்பிட்டனர்.
மேலும், “ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இதுசம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்கம் செய்ய புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது” எனச் சுட்டிக்காட்டினர்.
அப்போது, சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன், “ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையைச் செய்ய தவறியதாகிவிடும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா? என்பதை மட்டும் தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா? குதிரை பேரம் நடந்ததா? என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவுக்கான நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. அதனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
| இதையும் படிங்க: ஆர்டிஐ கேள்விகளுக்கு 2 ஆண்டுகள் கழித்து பதில் தந்தது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி |
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், மேனகா, குருசாமி ஆகியோர், “எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு, வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை எடுக்க முடியும். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சியில் இணைவது; ஜனநாயக ரீதியான அரசியல் தான்.
எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானவை, சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை” என்றனர்.
மேலும், “ராஜினாமா கடிதங்கள் தபாலிலோ, வேறு நபர்கள் மூலமாகவோ அனுப்பப்பட்டு இருந்தால், அவற்றின் உண்மைத்தன்மை குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தலாம். ஆனால் நேரில் சந்தித்து, கைப்பட எழுதி ராஜினாமா கடிதம் அளித்தால் அதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொகுதி மக்கள்தான் கேள்வி கேட்க முடியும்” எனக் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “உண்மையாக, சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

