ETV Bharat / state

இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூகவலைதள கட்டுப்பாடுகள் - அண்ணாமலை வலியுறுத்தல்

சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அது தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

WE THE LEADER அமைப்பின் தலைவர் அண்ணாமலை
WE THE LEADER அமைப்பின் தலைவர் அண்ணாமலை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 6:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோவை: ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளை போல இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளப் பயன்பாட்டை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய சட்டங்கள் தேவை என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 'WE THE LEADERS' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சீன அரசின் அனுமதிக்குப் பிறகு இந்த ஆண்டு, நேபாளம் வழியாக கைலாஷ் மான்சரோவர் யாத்திரைக்கு தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு, கரூர், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்றிருந்தனர்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சென்ற 73 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள் மற்றும் குடிவரவு சோதனைச் சாவடி உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

இரு நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதி என்பதால் தகவல் தொடர்பிலும், மீட்புப் பணிகளிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக சிறப்பு மீட்புக் குழுவை அங்கு அனுப்பி, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தோரின் உடல்களைத் தாயகம் கொண்டுவரவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் விருப்பம் - திருமாவளவன் பேட்டி

கல்லூரிகளில் மாணவர் பேரவை மற்றும் முறையான தேர்தல்களை ஊக்குவிக்க வேண்டும். லிங்டோ கமிட்டி பரிந்துரைகள் முறையாக அமல்படுத்தப்படாததால் ஆரோக்கியமான அரசியல் தலைமை உருவாவது தடைபடுகிறது.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் தேவை

திரைப்படத் தணிக்கை விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். திரையரங்குகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும். ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளை போல இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குச் சமூக வலைதளப் பயன்பாட்டை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய சட்டங்கள் தேவை. சமூக வலைதள அடிமைத்தனத்தால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது.

'வீ தி லீடர்ஸ்' இயக்கம் சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கில் இதுவரை 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடக்கூடாது

போதைப்பொருள் ஒழிப்பில் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதுடன் மட்டும் நின்று விடாமல், அதன் தேவையை முற்றிலுமாக ஒழிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். சட்டமன்றம் என்பது ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அது தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.