ETV Bharat / state

மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்கிய அந்தமான் விமானம்

விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகளுக்கு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் - கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 10:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி புறப்பட்ட விமான தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் இன்று (ஆகஸ்ட் 30) காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அந்தமான் வான் வெளியை நெருங்கியபோது மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது. ஆனால், நீண்ட நேரமாகியும் வானிலை சீரடையாததால் விமானம் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பியது.

இதன்பின் வானிலை சீரடைந்தால் மீண்டும் விமானம் அந்தமான் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வானிலை சீரடையாததால் இன்று அந்தமான் செல்லவிருந்த விமானத்தின் பயணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த 176 பயணிகளும் நாளை காலை 9.10 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அந்தமான் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பயணிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, தங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடவசதி, உணவு வசதி போன்றவைகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

விமான பயணத்தின் மேப்
விமான பயணத்தின் மேப் (ETV Bharat Tamil Nadu)

ஆனால், உள்நாட்டு விமான பயணிகளுக்கு அந்த வசதி கிடையாது. நீங்கள் உங்களுடைய வீடுகளுக்கு அல்லது நீங்கள் தனிப்பட்ட முறையில் எங்காவது தங்கி விட்டு வாருங்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் விமான பயணிகள் அதை ஏற்காமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் ரத்து எதிரொலி; சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டமா?

அதன்பின்பு பயணிகளுக்கு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்குவதற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், 31 பயணிகள் தாங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு நாளை காலை வருவதாக கூறிவிட்டு சென்று விட்டனர். அவர்களை தவிர மற்ற 145 பயணிகளும் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி புறப்பட்டு, அந்தமானை நெருங்கிய சூழலில் அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானம் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவாகியது.