40 எம்பிக்களை கொடுத்திருந்தால் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தியிருப்போம்: அன்புமணி
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Published : July 4, 2026 at 3:37 PM IST
சென்னை: தமிழக மக்கள் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை எங்களுக்கு கொடுத்திருந்தால் நாங்கள் மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்போம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் கல்லணையை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பொய் கூறுகிறார். கர்நாடகாவை விட தமிழகம் தான் அதிகம் பயன்பெறும் என்பது முதல் பொய், பெங்களூர் குடிநீர் தேவைக்காக என்பது இரண்டாவது பொய், உச்ச நீதிமன்றம் அனுமதி என்பது மூன்றாவது பொய். இவ்வாறு பொய் கூறியே மேகதாது அணையை கட்டிவிடலாம் என்று கர்நாடக அரசு நினைக்கிறது.
மேகதாதுவில் அணைக்கட்டினால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். கே.ஆர்.எஸ் அணை மூலம் பெங்களூருக்கு தண்ணீர் கிடைக்கிறது. கர்நாடக அரசு காவேரி விவகாரத்தில் எந்த தீர்ப்பையும் மதிப்பதில்லை. மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பேரம் நடந்து வருகிறது.
2028-இல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிவக்குமார் அணை கட்ட முயற்சிக்கிறார். ராசி மணலில் அணைக்கட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. நாம் இங்கு அணைக்கட்டுவோம் என்றால், அவர்கள் மேக தாதுவில் அணைக்கட்டுவோம் என்பார்கள். எனவே அந்த கோரிக்கை தற்போது தேவையில்லாது.
கர்நாடக அரசு தொடர்ந்து ஜன நாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். மேகதாது விவகாரத்தில் பல அமைப்புகள் பல விதமாக வழக்குகள் தொடர வேண்டும். இது தொடர்பாக நாங்கள் விரைவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன். தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு 40 எம்பிக்கள் கொடுத்திருந்தால் நாங்கள் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்திருப்போம். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். பிரதமர், அமைச்சர்களை நேரில் சந்திக்க வேண்டும்.
காவிரிக்காக எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள் வைக்கும் கோரிக்கை பரிசீலித்து தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதை தீவிரமாக தடுக்க வேண்டும் அதற்காக இளைஞர்கள் சாலைக்கு வந்து போராட வேண்டும்" என்றார்.

