ETV Bharat / state

பெண் குழந்தைகள் வேண்டாம் என எண்ணுவோருக்கு 'ஆஷா' படம் ஒரு பாடம்: அன்புமணி நெகிழ்ச்சி

இந்தியாவில் 10 லட்சத்து 70 ஆயிரம் ஆஷா ஊழியர்கள் உள்ளனர். இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக செயல்படுத்த விடாமல் தடுக்கிறார்கள் என அன்புமணி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 7:14 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆண் குழந்தைகள்தான் வேண்டும்; பெண் குழந்தைகள் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு 'ஆஷா' திரைப்படம் ஒரு நல்ல பாடமாக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

ஆஷா எனப்படும் கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில் ஆஷா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படக் குழுவினருக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "தேர்தல் நெருங்கிவிட்டதால் நிறைய வேலைகள் உள்ளன. ஆனாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளேன். ஏனென்றால், ஆஷா படம் ஏற்படுத்திய தாக்கம், எனக்கு இரண்டு நாட்களாக இருந்தது. அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். நான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபோது 1 லட்சம் பிரசவத்தில் 300 மரணங்கள் வரை நிகழும். ஆனால் இன்று 1 லட்சம் பிரசவத்தில் 80 மரணங்கள் வரை மட்டுமே நிகழ்கின்றன. பிறக்கும் 1000 குழந்தைகளில் 68 குழந்தைகள் இறப்பார்கள். ஆனால், இன்று 1000 குழந்தைகளில் 35 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன. இது பெரிய சாதனை.

தேசிய ஊரக நல்வாழ்வு சுகாதாரத்திட்டம் உருவாக்கப்பட்டதே இதற்கு காரணம். இதில் பணிபுரிபவர்கள்தான் ஆஷா ஊழியர்கள். இந்தியாவில் 10 லட்சத்து 70 ஆயிரம் ஆஷா ஊழியர்கள் உள்ளனர். இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக செயல்படுத்த விடாமல் தடுக்கிறார்கள். 35 வயதில் நான் மத்திய அமைச்சராக இருந்த போது புகையிலை பொருட்கள் மீது தடையை கொண்டு வர பல்வேறு கஷ்டங்களை அனுபவதித்தேன். அந்த சமயத்தில், எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவர் மன்மோகன்சிங்.

அப்போது எனக்கு எதிராக 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 முதலமைச்சர்கள் இருந்தனர். புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதே போல, போலியோ சொட்டு மருந்து தொடர்பான விழிப்புணர்களை ஏற்படுத்தினோம். இதன் விளைவாக, போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கி காட்டினோம்.

ஆஷா படம் எமோஷனலான படம். ஆண் குழந்தைகள் வேண்டும், பெண் குழந்தைகள் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு ஆஷா படம் பெரிய பாடமாக இருக்கும். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது வடமாநிலங்கள் செல்வேன். அப்போது அங்குள்ள ஆஷா ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாம் அரசு ஊழியர்கள் என நினைத்து பணியாற்றுவார்கள். அவர்களுக்கு சம்பளம் கிடையாது. ஊக்கத்தொகை தான். ஆனாலும் அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக பணியாற்றினார்கள்.

ஆஷா திரைப்பட குழுவினருக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பிரமதர் மோடியை சந்தித்து, ஆஷா திரைப்படம் பற்றி அவரது கவனத்திற்கு கொண்டு செல்வேன்" என அன்புமணி கூறினார்.