ETV Bharat / state

இன்ஸ்டாவால் வந்த ஆட்சி இன்ஸ்டாவால் வீழும்; தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்

நான்காம் வகுப்பு பிள்ளைகளுக்கு இருக்கும் கணித அறிவு கூட தவெக அமைச்சர்களுக்கு இல்லை என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி
டிடிவி தினகரன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 3:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: இன்ஸ்டாகிராம் மூலம் வந்த தவெக ஆட்சி இன்ஸ்டாவால் வீழும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

'எம்எல்ஏக்களுக்கு அ, ஆ கூட தெரியவில்லை'

அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "தவெகவின் 100 நாள் ஆட்சி சினிமா படம் பார்ப்பது போல உள்ளது. எதார்த்தத்திற்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் இளைஞர்களை கவர்ந்து மாற்றம் என வாக்குறுதிகளை சொல்லி அவர்களே ஆட்சிக்கு வருவோமா? என தெரியாமல் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்கள் தங்களது தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரே தெரியாமல் சினிமா கதாநாயகனை நம்பி வாக்களித்து குடும்பத்தினரையும் வாக்களிக்க வைத்துள்ளார்கள். தமிழை கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியுள்ளார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழை கூட சரியாக பேச தெரியவில்லை. இவர்களுக்கு அ, ஆ கூட தெரியவில்லை.

24 ஆம் புலிகேசி ஆட்சி போல உள்ளது இந்த ஆட்சி. அடிப்படை கணித அறிவு கூட இல்லாமல் அமைச்சர்கள் பேசுகின்றனர். சினிமாவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வந்தனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் எதாவது இது போன்று குற்றச்சாட்டு இருந்ததா? GEN-Z தலைமுறைகள் மற்றும் இளைஞர்கள் யாரென்று தெரியாத நபரை தவறான ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.

'எம்எல்ஏக்களுக்கு அடிப்படை கணக்கு கூட தெரியவில்லை'

ஆதவ் அர்ஜூனா மில்லி லிட்டர் என சொல்ல தெரியாமல் மில்லி மீட்டர் என்கிறார்கள்; நிதியமைச்சருக்கு தமிழ் பேச தெரியாது என சொன்னால் கிறிஸ்துவ மதம் என நிதியமைச்சர் சொல்கிறார்; மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம்?

விவசாயிகள் மேட்டூரில் தண்ணீரை காலம்தாழ்த்தி திறப்பதாக வருத்தத்தில் உள்ளனர். ஆனால் நேற்று காலை தொடங்கி வீடு திரும்பும்வரை சூட்டிங் போல சென்று வந்துள்ளார். மாற்றம் வேண்டும் என்ற காரணத்தை சொல்லிய இளைஞர்கள் தற்போதைய அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள்; இப்போது சினிமா கவர்ச்சியை நம்பிதான் இந்த ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

100 நாட்கள் முதலமைச்சர் மௌனவிரதம் இருக்கிறார்; அமைச்சர்கள் , எம்எல்ஏக்களுக்கு 4 ஆம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அடிப்படை கணிணி அறிவு கூட இல்லை; விஷமத்தனமான ஒரு எண்ணத்தில் தவெக எம்எல்ஏ, அமைச்சர்கள் உள்ளனர்.

'இன்ஸ்டாவால் வந்த ஆட்சி இன்ஸ்டாவால் வீழும்'

தமிழகத்தில் திமுக ஆட்சியை விட போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. லஞ்சம் ஊழல் குறையவில்லை. இளைஞர்கள் தங்கள் தலையிலேயே கொள்ளிக்கட்டையை வைத்துள்ளனர். தமிழகத்தை வீழ்த்த வந்த சக்திக்கு வாக்களித்துள்ளனர்.

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளோம்; நான் என்றும் அவசரப்படமாட்டேன்; இலவுகாத்த கிளி போல காத்திருக்க மாட்டேன். தற்போது எம்எல்ஏ தொந்தரவே தாங்க முடியவில்லை, இதில் உள்ளாட்சியில் அவர்கள் வந்தால் என்ன ஆகும்? கத்தி எடுத்தவர்களுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி என்பது போல, இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்ஸ்டாகிராமால் வீழ்வார்கள்" என்றார்.