ETV Bharat / state

தொடரும் இழுபறி... முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னரும் முடிவாகாத திமுக - காங்கிரஸ் கூட்டணி

முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ப.சிதம்பரம் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.

முதல்வரை சந்திக்க வந்த ப.சிதம்பரம்
முதல்வரை சந்திக்க வந்த ப.சிதம்பரம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 3:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியைச் சுற்றி பரபரப்பு நீடித்து வரும் நிலையில், இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள, முதல்வரின் முகாம் அலுவலகத்தில்,ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கூட்டாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மேலும் இந்த ஆலோசனையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழியும் கலந்துகொண்டிருந்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்புக்கு முன்னதாக செல்வப் பெருந்தகை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

திமுகவைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 25 சட்டமன்ற தொகுதிகளையே காங்கிரசுக்கு ஒதுக்குவதாக முடிவெடுத்திருந்தது. ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில், “25 சட்டமன்ற தொகுதிகள் எங்களுக்கு போதுமானதல்ல என்றும் ராஜ்யசபா உறுப்பினரை நாங்களே தேர்வு செய்யும் வகையில் கூடுதல் இடங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றும் கிரிஷ் ஜோடங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பில் 36 சட்டமன்ற தொகுதிகள் திமுகவிடம் கோரப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கருத்தை செல்வப்பெருந்தகையும் உறுதிப்படுத்தியிருந்தார். இதன் பின்னணியில் கூட்டணிக்குள் சலசலப்பு அதிகரித்தது. இறுதியாக திமுக சார்பில் 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின், ப.சிதம்பரம் உடனான சந்திப்பு, கூட்டணியை இறுதி செய்வதற்கான சந்திப்பு என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படுமா? காங்கிரஸ் கோரிய சட்டமன்ற தொகுதிகளை திமுக வழங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, '' தகவல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவிடமிருந்து எந்த கெடுவும் விதிக்கப்படவில்லை. முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அடிக்கடி சந்திப்பது போலவே இன்றும் சந்தித்து பேசினோம். இழுபறி என்று ஒன்றும் இல்லை. பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்பு அறிவிப்பு வெளியாகும்'' என்றார்.

இதையும் படிங்க: நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலரை தட்டி தூட்டிய போலீஸ்