ETV Bharat / state

யாருடன் கூட்டணி? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா

யாருடன் கூட்டணி என ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் அறிவிக்காத போது, நாம் ஏன் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்..

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 10:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கடலூர்: தேமுதிக இன்றி தமிழ்நாட்டில் யாரும் இனி ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

மாலை 5 மணி அளவில் தேமுதிக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், மாநாட்டு திடலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இன்றைக்கு அனைவரின் கவனமும் தேமுதிகவை நோக்கியே இருக்கிறது. நாம் என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். யாருடன் கூட்டணி என்று நான் முடிவெடுத்துவிட்டேன். ஆனால், யாருடன் கூட்டணி என ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் அறிவிக்காத போது, நாம் ஏன் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிவிக்க வேண்டும்.

பேரம் பேசுவேன்

தேர்தல் வந்தால் பேரம் பேசுவேன் என்கிறார்கள். பேரம் பேசுவேன், யாரிடம் பேசுவேன் தெரியுமா? எங்கள் நிர்வாகிகளிடம் பேசுவேன். தொண்டர்களிடம் பேசுவேன். வேறு யாரிடமும் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

தேமுதிகவின் தேவை அனைவருக்கும் தேவை

இன்றைக்கு நாம் கூட்டணி தொடர்பாக என்ன அறிவிக்கப்போகிறோம் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்களிடம் கூட்டணி தொடர்பாக பேசி இறுதி முடிவு எடுத்துவிட்டேன். யாருடன் கூட்டணி என்று எனக்கு மட்டும்தான் தெரியும். விரைவில் உங்களுக்கு அது தெரியவரும். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். நமக்கும் தை பிறந்தவுடன் வழிபிறக்கும்.

நம்முடைய துணையில்லாமல் தமிழ்நாட்டில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பெரிய கட்சிகள் அனைத்திற்கும் நம்முடைய தேவை உள்ளது. இதுவரை நாம் சத்ரியனாக இருந்தோம். வரும் தேர்தலில் நாம் சாணக்கியனாக இருப்போம். யாருக்கும் அஞ்சாத வீரராக நம்முடைய கேப்டன் இருந்தார். அவரின் வாரிசுகளான நாம், அதை மெய்ப்பித்து இந்த தேர்தலில் புதிய வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டும். வரும் காலம் நமக்கானது. நமது வெற்றியை இனி யாராலும் தடுக்க முடியாது" என்றார்.