ஸ்லோ மோடில் தேர்தல் ஆணையம் - அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புதிய மனு தாக்கல்
அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, புகார் மீதான விசாரணை தொடர்பாக கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : January 5, 2026 at 7:03 PM IST
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார் மீதான விசாரணையை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த புகார்களின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், '2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிலை உள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
'இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு , இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும்' என்று உறுதி அளித்திருந்தது.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் சட்டவிரோத விடுதிகள் - நீதிபதிகள் அதிரடி உத்தரவு
மேலும், 'பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை தொடர்பாக கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை என்றும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் விரைவாக விசாரித்து முடிக்கப்படும்' என்றும் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்த பதில் மனுவில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், 'சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார் மீதான விசாரணையை தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரி உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. அதையொட்டி தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

