ETV Bharat / state

அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது; சபாநாயகரிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு

அதிமுகவில் இருந்து விலகி ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 2:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

அதிமுகவிலிருந்து வெற்றி பெற்று, தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரின் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், வழக்கறிஞர் இன்பதுரை உள்ளிட்டோர் சந்தித்து அதிமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று இன்று மனு அளித்தனர்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள், அதிமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "கடந்த 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இருப்பினும் இதனை மீறி நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்துள்ளார்.

அந்தக் கடிதம் பரிசீலனையில் இருப்பதாக பேரவை தலைவர் சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், தங்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.

ஏற்கெனவே அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுகவின் கடிதம் ஆய்வில் இருக்கும் நிலையில், அவர்கள் பதவியை ராஜிநாமா செய்தபோது, அதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்திற்கும் முரணானது” என குற்றம்சாட்டினார்.

மேலும், “இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது, எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என்று கூறினார். ஆனால் இந்த அரசில் காலையில் ராஜிநாமா செய்தவர்களுக்கு ஜந்து நிமிடங்களில் கட்சியில் சேர்த்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா என்று தெரியவில்லை” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசு குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கூறுகின்றனர். தூய்மையான ஆட்சியை தருவதாக கூறிய முதலமைச்சர், முறைகேடாக பின்வாசல் வழியாக தனது ஆட்சியை நிலைநிறுத்த குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துகிறார்" என விமர்சித்தார்.

இதையும் படிங்க: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா - தவெகவில் இணைவாரா?

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தது குறித்த கேள்விக்கு, “சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கோரி பேரவை தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்” என பதிலளித்தார்.

”ராஜிநாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு பதவியை ராஜிநாமா செய்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று அ தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, “நாங்கள் கொடுத்த மனுவின் அடிப்படை என்னவென்றால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பிறகும், அதை மீறி சபாநாயகர் எப்படி ராஜினாமாவை ஏற்க முடியும்? அறிவிப்பு வந்த பிறகுதான் ராஜினாமா செல்லுபடியாகும். அறிவிப்பு வருவதற்கு முன்பே அவர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்துள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த ராஜிநாமாவை ஏற்கக்கூடாது.

சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொய்யாக நம்புகிறார்கள்.
இது தவறு. எந்த அரசாணை வெளியிட்டாலும் அதை திரும்பப் பெறும் அதிகாரம் இருக்கிறது” என கூறினார்.