ETV Bharat / state

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி: வரும் 9ஆம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

அதிமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருப்ப மனு பெற்ற அதிமுக தொண்டர்கள்
விருப்ப மனு பெற்ற அதிமுக தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 9:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் ஜனவரி 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வழங்கினர். இதற்கான கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.

அந்தவகையில் அதிமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தேதியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி அதிமுக சார்பில் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு துவங்கும் நேர்காணல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறுகிறது.

விருப்ப மனு பெற்ற அதிமுக தொண்டர்கள்
விருப்ப மனு பெற்ற அதிமுக தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu)

முதல் நாளான ஜனவரி 9 ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தை சார்ந்த விருப்ப மனு அளித்தவர்களிடமும், ஜனவரி 10 ஆம் தேதி கன்னியாகுமாரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை மற்றும் ஜனவரி 11 ஆம் தேதி விருதுநகர், கடலூர், நாமக்கல், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும்.

ஜனவரி 12 ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஜனவரி 13 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: 'குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஜாக்கிரதையாக விசாரிக்க வேண்டும்' - காவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.