ETV Bharat / state

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2026 at 4:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தங்களை இணைத்து கொண்டனர்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த நிலையில் கட்சி தலைமை மீது அதிருப்தி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர்.

கடந்த மே 13- ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அத்துடன், அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுகவின் இருதரப்பினரும் மாறி மாறி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன்
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் (ETV Bharat Tamil Nadu)

இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ்- க்கு கோரிக்கையை முன் வைத்திருந்தது. இந்த சூழலில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வழங்கினர்.

ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்ததைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நான்கு பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் அதிர்ச்சியடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான முடிவு செய்து சபாநாயகரிடம் தாங்கள் அளித்த கடிதத்தைத் திரும்பப் பெற்றனர். அத்துடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. எனினும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: ‘நீ நல்லா சாப்பிட்டு இருக்க, நான் இன்னும் சாப்பிடல’ - பேருந்து நிலையத்தில் அமைச்சரின் பதிலால் முகம் சுளித்த பயணிகள்

இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (மே 28) நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுகவினரை தவெகவின் துண்டை அணிவித்து அமைச்சர்கள் வரவேற்றனர். அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைவதால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதனிடையே, திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.