வேளாண் பட்ஜெட் எதிரொலி: விவசாயிகளுடன் அமைச்சர் வினோத் ஆலோசனை
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published : July 8, 2026 at 3:04 PM IST
சென்னை: வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளுடன் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் துறைகளின் தேவைகள் குறித்து முதலமைச்சர் விஜய், ஜூலை 2 ஆம் தேதி முதல் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்ஜெட்டிற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் என்ன என்பதை நேரடியாக அறியும் நோக்கில், வேளாண் துறை அமைச்சர் வினோத் தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வினோத் தலைமையில் வேளாண்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், வேளாண் பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்கள் இடம்பெற்றால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக கருத்துகள் பெறப்பட்டன.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கூடுதல் குளிர்சாதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும், விவசாயத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் வேளாண்மை தொடர்பாக அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் இந்த ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையில் வேளாண் துறை தொடர்பான துறைவாரியான ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூலை 16-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாகவே விவசாயிகளின் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தொகுத்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

