விவசாய கிணற்றில் கார் விழுந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பிறகு காரை மீட்டனர்.

Published : March 3, 2026 at 5:36 PM IST
விழுப்புரம்: செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் தனது நணபர்களான ராஜா, சேகர், ஜெயின் ஆகியோருடன் காரில் திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்று பௌர்ணமி கிரிவலம் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் மற்றும் செஞ்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காரை கிரேன் உதவியுடன் மீட்டனர்.
அப்போது காருக்குள்ளேயே இறந்துக் கிடந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து மற்றொரு நபரை தேடும் பணி சுமார் 5 மணி நேரமாக நீடித்த நிலையில் அவரும் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்கு பின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
கிரிவலம் சென்று விபத்து நேரிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோர கிணற்றுக்கான தீர்வுதான் என்ன?
- மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோரம் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணறுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
- கிணறு தொடர்பான விழிப்புணர்வு பலகைகளை சாலையில் வைக்க வேண்டும்.
- கிணறு இருக்கும் இடங்களில் தடுப்பு பகுதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகிம் முயற்சிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

