சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் குதிரை பேரம் செய்யும் த.வெ.க - அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு
சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ளவும், வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தவெகவில் அடைக்கலம் தேடி கொள்கிறார்கள் என அதிமுகவில் இருந்து வெளியேறியவர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Published : July 7, 2026 at 12:04 PM IST
திருவண்ணாமலை: சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், 118 என்ற மேஜிக் எண்ணை பெறுவதற்காக ராக்கெட் வேகத்தில் குதிரை பேர அரசியலில் த.வெ.க ஈடுபட்டு வருவதாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 6) செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் த.வெ.க வாங்கியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், 118 என்ற மேஜிக் எண்ணை பெறுவதற்காக குறுக்கு வழியில் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், “அரசியலை வாக்காளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். வருங்காலங்களில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், ”ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை நேரடியாக அழைத்து கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்ததற்கான காரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.
வருங்காலங்களில் அதிமுகவில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து கருத்துகளை கேட்டு வருகிறார். வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பொதுச் செயலாளர் எடுக்கின்ற முடிவின்படி அ.தி.மு.க போட்டியிடும்.
எடப்பாடி பழனிசாமி ஜனநாயக முறைப்படி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரோடு இணைந்து அதிமுகவை வழி நடத்தி வருகிறார். பதவி சுகத்திற்காகவும், தாங்கள் சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தங்கள் மீது ஏற்கனவே போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சிலர் தவெகவுக்கு சென்று அடைக்கலம் தேடி வருகிறார்கள்.
| இதையும் படிங்க: பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்: மாநில அரசு பதிலளிக்க மதுரை அமர்வு உத்தரவு |
இதனால் அதிமுகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுகவுடன் தான் உள்ளனர். வேடந்தாங்கல் பறவை போல நிறம் மாறி செல்பவர்களால் அதிமுகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. பிரிந்து போனவர்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டில் எந்த அளவும் உண்மை இல்லை என்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரை பேரம் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிகிறது. இதுகுறித்து, ஆளுநரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளோம். துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை.
இவர்களை எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் ஆன்மா மன்னிக்காது. வருகின்ற அனைத்து தேர்தல்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்திக்கும். நிச்சயம் அனைத்து தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்” என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

