ETV Bharat / state

வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயுமா?

தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை நீதிபதி அமர்வில் முறையிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 4:17 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை (Finalized SOP) அறிவிக்காததால், தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த செப். 27ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி, த.வெ.க, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி, மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று, பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் அனுப்பியுள்ள நோட்டீஸ்
வழக்கறிஞர் சூரியபிரகாசம் அனுப்பியுள்ள நோட்டீஸ் (ETV Bharat Tamil Nadu)

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிமுக, த.வெ.க., மற்றும் தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் ஆலோசனைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் அளித்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஜனவரி 5 ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்காதது, நீதிமன்ற அவமதிப்பு செயல் என, தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சூரியபிரகாசம், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் ரோடு ஷோக்கள் நடத்துவதை தடுக்கும் வகையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை நீதிபதி அமர்வில் முறையிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூர் சம்பவம்: விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்