நகராட்சி பணி நியமன வழக்கு; அதிமுகவுக்கு அவசரம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி
இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரான ஐ.எஸ். இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

Published : February 26, 2026 at 2:51 PM IST
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? என மனுதாரர் இன்பதுரையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக எம்.பி இன்பதுரை சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலி பணியிடங்கள் நியமனங்களுக்கு 1,020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ஐ.எஸ். இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும்? மேலும், இது தொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் வழக்கு உடனே விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
| இதையும் படிங்க: தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மக்கள் மீது திருப்புவதா? விஜய்யை விமர்சித்த அண்ணாமலை |
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரான ஐ.எஸ். இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர். அதில், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை சரியாக இல்லாத காரணத்தினால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநர் துரைகுமாருக்கு அதிமுக எம்.பி இன்பதுரை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியும் அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், அமலாக்கத்துறை ஆதாரங்களின் அடிப்படையில் அவர்மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

