திமுகவுக்கு தேர்தல் பயம்; அதனால் மக்களுக்கு பண பலன் - செல்லூர் ராஜு விமர்சனம்
தேர்தல் வருவதால் புதிய சாலைகள் அமைத்து வருகின்றனர். புதிய புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Published : March 3, 2026 at 3:43 PM IST
மதுரை: தேர்தல் பயம் வந்துவிட்ட காரணத்தால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு பணப்பலன்களை அள்ளி திமுக அரசு அள்ளி வீசி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "தி.மு.க.வினருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பணப்பலன்களை அள்ளி வீசி வருகின்றனர். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்ததால் தூக்கம் வராமல் தவித்து வருகிறார்.
பொதுமக்களுக்கு இலவச பட்டா தருவதாகக் கூறிவிட்டு வெறும் பேப்பரை மட்டும் வழங்கி வருகின்றனர். தேர்தல் வருவதால் புதிய சாலைகள் அமைத்து வருகின்றனர். புதிய புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். தோல்வி பயம் வந்ததால் தான் கூட்டணி கட்சிகளை கூப்பிட்டு கூப்பிட்டு கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. தில்லுமுல்லு கட்சி. வளர்ச்சிக்கான கட்சி இல்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பர். அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர்களை தற்போது தி.மு.க.வினர் அழைத்து பல்வேறு பதவிகளை வழங்கி வருகின்றனர். தி.மு.க.வில் பல சீனியர்கள் இருந்தும் அவர்களுக்கு பொறுப்பு தராமல் அ.தி.மு.க.விலிருந்து சென்றவர்களுக்கு பொறுப்பு தருவது தி.மு.க. கட்சியினரிடையே கலக்கத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெயில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு இருந்த போதும் கூட பொதுமக்கள் மதியம் 01.00 மணி முதல் மாலை வரை அமர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியா? அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியா? செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றாலே அது அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி தான். இந்தக் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் பாஸ். தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் என பல கட்சிக்கு மாறியவர். தி.மு.க.வுக்கு விசுவாசி. தி.மு.க.வின் ஊதுகுழலாக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது. அவரது எதிர்காலம் முடிவடைந்துவிட்டது. தி.மு.க.வில் சேர்ந்ததை பொதுமக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. இவரை போய் முதலமைச்சராக்கி இருந்தார்களே என பொதுமக்களே வேதனை தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா இருக்கும்போது சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் எப்படி பேசினார்? தற்போது எப்படி அவர்களை புகழ்ந்து பேசி வருகிறார். இனிமேல் அவருக்கு தோல்விதான். ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வை ஆதரித்துக் கொண்டுதான் இருந்தார்.
தி.மு.க. தான் காங்கிரஸின் அடிமை கட்சி; தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வைத்தால் நல்ல கூட்டணி; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வைத்தால் அது அடிமை கூட்டணியா?" என்று கேள்வி எழுப்பினார்.

