ETV Bharat / state

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக இந்த தேர்தலில் மொத்தமாக 1.04 கோடி (21.21 சதவீதம்) வாக்குகளை பெற்றுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2026 at 6:34 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 4) வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக-வின் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை (மே 6) நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வின் தேர்தல் வியூகம், தேர்தலில் வெற்றியை இழந்தவர்களிடம் அதற்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 166 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. மேலும், நேரடியாக போட்டியிட்ட மொத்த தொகுதிகளில் 47 இடங்களில் மட்டுமே அது வெற்றிப் பெற்றது. அதிமுக இந்த தேர்தலில் மொத்தமாக 1.04 கோடி (21.21 சதவீதம்) வாக்குகளை பெற்றுள்ளது.

இந்த வெற்றி வேட்பாளர்களுடன் அதிமுக-வின் நிலைப்பாடு குறித்தும், தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி, குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியைத் தழுவியது மற்றும் ஓட்டு விகிதம் குறைந்தது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: திமுக கோட்டையாக கருதப்பட்ட தலைநகர் சென்னை தவெக வசமானது எப்படி?

32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டவர்களும் இந்த தேர்தலில் டெபாசிட்டை இழந்து உள்ளனர்.

தேர்தலின் போது, மாவட்ட செயலாளர்களிடம், போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிப்பெற வேண்டும் என கூறப்பட்டது. இருப்பினும் பலர் படுதோல்வி அடைந்துள்ளனர். கட்சியின் நிர்வாகிகள் சிலர் சரியாக பணியாற்றாமல் இருந்ததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

எனவே, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லவும், கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சட்டப்பேரவையில் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.