'தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்கும் ஒரே அரசியல் தலைவர் விஜய் மட்டுமே' ஆதவ் அர்ஜுனா உறுதி
தவெக கூட்டத்திற்கு காவல்துறையினர் முறையான பாதுகாப்புகளை கொடுப்பதில்லை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் 15, 20 நாட்கள் அனுமதி வழங்க எடுத்துக் கொள்வதால் 15 நாட்களுக்கு ஒருமுறையே தலைவரின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது.

Published : February 24, 2026 at 9:35 PM IST
சென்னை: தமிழகத்தில் பாஜகவை வீரியமாக எதிர்க்கும் தலைவராக விஜய் இருப்பதாக அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, '' வில்லிவாக்கத்தில் மருத்துவமனை, அரசு கல்லூரி, அரசு பள்ளி என எதுவுமே இல்லை. மழை வரும் என பார்த்தால், சாக்கடை தண்ணீர் தான் வருகிறது. இது வில்லிவாக்கம் இல்லை சாக்கடைவாக்கமாக உள்ளது.
தொகுதியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் தான் இல்லை என்று பார்த்தால் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகமே இல்லாமல் உள்ளது. அதே போல இந்த தொகுதியில் திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை. அதிமுகவை பேக் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டனர். வருகின்ற தேர்தலில் 2000, 3000 என ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். ஐந்து வருடத்திற்கு இதை கணக்கிட்டு பார்த்தால் மாதத்திற்கு 50 ரூபாய் மட்டுமே.
கடந்த பருவ மழையில் வில்லிவாக்கம் மொத்தமாக மூழ்கியது. கடந்த காலங்களில் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் பொழுது வேட்டியை கட்டிக்கொண்டு மழை பாதித்த இடங்களை பார்வையிட்டார். தற்பொழுது அவரது வாரிசுகள் ரெயின் கோட்டு போட்டு கொண்டு மழை பாதித்த இடங்களை பார்வையிடுகின்றனர். அந்த காலம் முதல் இந்த காலம் வரை எதுவுமே மாறவில்லை. அதே போல தேர்தல் வந்துவிட்டால், மாற்று கட்சியினர் சாதி, மதத்தை வைத்து தொகுதியை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எங்கள் தலைவர் விஜய் வறுமையின் உச்சத்தில் உள்ள தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுவார்.
தேர்தல் பத்திரத்தில் முதல்வருக்கு வாகனம் கூட இல்லை என கூறுகிறார். ஆனால் இப்போது அவர் சென்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாகனம் யார் பணத்தில் வாங்கியது?. விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பாஜகவை நாங்கள் தான் எதிர்க்கிறோம் என கூறி வருகின்றனர். இந்தியாவில் பாஜகவை தைரியமாக எதிர்ப்பது இருவர்தான்; ஒன்று ராகுல் காந்தி, இன்னொன்று எங்கள் தலைவர் விஜய்.
மத்திய பாஜக அரசை நாங்கள் எதிர்க்கவில்லை என கூறுகின்றனர். அப்படி எதிர்க்கவில்லை என்றால், எங்கள் தலைவரின் படமான ஜனநாயகன் வெளிவந்திருக்கும். ஆனால் படம் வெளிவராமல் உள்ளதால், நஷ்டத்தை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். அனால், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பராசக்தி படத்திற்கு மட்டும் எப்படி சான்றிதழ் கிடைத்தது? அவர்களுக்கு மட்டும் மத்திய அரசு எப்படி சான்றிதழ் கொடுத்தது? என நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வேலூர் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எங்கள் தலைவர் விஜய் கரூர் துயரத்தின் வலியால் தான் கண் கலங்கினார். அதே போல, புரட்சித் தலைவர் எம்ஜிஆரையும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவையும் இந்த திமுகவினர் கண்கலங்க வைத்தனர். திமுகவினருக்கு எங்கள் தலைவரை பார்த்து பயம் வந்துவிட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்திற்கு காவல்துறையினர் முறையான பாதுகாப்புகளை கொடுப்பதில்லை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் 15, 20 நாட்கள் அனுமதி வழங்க எடுத்துக் கொள்வதால் 15 நாட்களுக்குப் பிறகு தலைவரின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. நடக்கும் அனைத்திற்கும் முதலமைச்சர் தான் காரணம். ஆனால், எதுவும் பேசாதது போல அமைதியாக இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். அமைதிப்படை சத்யராஜ் போல அனைத்தையும் அவர் தான் செய்கிறார். தேர்தலில் உங்களை சந்திக்க அமைச்சர் சேகர்பாபு வந்தாலும், முதலமைச்சரே வந்தாலும் கதவை மூடிக்கொள்ளுங்கள், திறக்காதீர்கள்'' என கூறினார்.
'உங்கள் மீது கை வைத்தால்...'
தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், '' ஆட்சிக்கு வந்தால் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தால் தானே அவர்களால் அதை கொடுக்க முடியும். சென்னை திமுக கோட்டை என கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் 50, 60 நாட்களில் அந்த எண்ணம் உடைந்து போகும். அதே போல, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஓட்டு போட செல்லும் பொழுது ஒவ்வொரு நிர்வாகியும், தங்களுடன் இன்னொருவரை ஓட்டு போட அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வளவு நாள் உழைத்தது முக்கியமல்ல, தலைவர் யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறாரோ, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
234 தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் நிற்பார்கள், ஆனால் 170 லிருந்து 180 சட்டமன்ற தொகுதிகள் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல, உங்களை யாராவது மிரட்டினாலோ, உங்கள் மீது யாராவது கை வைத்தாலோ, அடுத்த நிமிடமே நம்முடைய கழகத்தினர் 2,000 பேர் அங்கு வருவார்கள். எனவே நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம்'' என ஆனந்த் கூறினார்.

