ETV Bharat / state

நிழல் முதலமைச்சராக செயல்படும் ஆதவ் அர்ஜுனா: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தவெக அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் ஜோக்கர்களாக இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 1, 2026 at 11:20 AM IST

1 Min Read
Choose ETV Bharat

அரியலூர்: தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக ஆதவ் அர்ஜுனா செயல்படுவதாக முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று (மே 31) நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததும், கொளத்தூர் தொகுதியில் தலைவருக்கு (திமுக தலைவர் ஸ்டாலின்) ஏற்பட்ட தோல்வியும் திமுகவினரின் ஆழ்மனதில் மாறா வடுவாக பதிந்துள்ளது.

இந்த ஆட்சி மாற்றம், ஏதோ பெரிய மாற்றம் அல்ல. 35% பேர் இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளனர். அதிலும் 20% பேர் அவரது ரசிகர்கள் ஆவர். குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் தருவதுபோல, இணையத்தில் தொடர்ந்து இனிப்பானவற்றை பேசி வந்த இன்புளுயன்சர்களை தவெக விலைக்கு வாங்கி, திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளாக பரப்பி ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இந்த ஆட்சி மாற்றம் என்பது நீடித்து நிலைக்காது. நீர்க்குமிழிபோல விரைவிலேயே வெடித்து நீர்த்துப்போகும். தற்போது பெற்ற வாக்குகளை தவெகவால் மீண்டும் வாங்க முடியாது என்ற காரணத்தினால்தான், அதிமுகவில் இருப்பவர்களை வலை வீசி பிடித்துக் கொண்டுள்ளனர்.

தவெக எந்த ஆயுதத்தை கையில் எடுத்து மக்கள் மனதை ஏமாற்றினார்களோ, இன்று அதே ஆயுதம் அவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவுக்கு ஆதரவாக புதிதாக பேசும் இளைஞர்கள் இளம்பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவர்கள் யாவரும் திமுகவோ, திமுகவுக்கு தொடர்புடையவர்களோ கிடையாது.

தவெகவில் இன்று யார் முதலமைச்சர்? விஜய் அல்ல, ஆதவ் அர்ஜுனா தான். திரைமறைவில் இருந்து நிழல் முதலமைச்சராக அவர் தான் செயல்படுகிறார் என்பது பட்டவர்தனமாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: முடிந்தது கோடை விடுமுறை: சென்னை திரும்பும் பயணிகளால் விமானக் கட்டணம் அதிகரிப்பு

இந்த தேர்தல் தோல்வி திமுக இன்னும் வேகமாக மீண்டு வருவதற்கான வாய்ப்பாகவே நாம் பார்க்க வேண்டும். நாம் பார்க்காத தோல்வி அல்ல. 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து இருந்தோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பால் தான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.

சீட்டுக்கட்டில் உள்ள 13 சீட்டுகளும் ஜோக்கராகவே உள்ளது போல் தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே ஜோக்கர்களாக உள்ளனர். இதில் மூத்த அமைச்சர் என்றால் செங்கோட்டையன் மட்டும்தான். திமுக உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் எழுந்து உடனேயே பதில் சொல்லி அமர்ந்து விடுவார். நீண்டநேரம் அவரால் பதில் சொல்ல முடியாது" என சிவசங்கர் தெரிவித்தார்.