விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியாவின் கார் - ஓட்டுநர் உயிரிழப்பு
டயர் பஞ்சரானதால் சாலையோரம் காரை நிறுத்தி ஓட்டுநர் சரி செய்து கொண்டிருந்த போது, திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

Published : March 2, 2026 at 5:07 PM IST
பெரம்பலூர்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடிகை தேவி பிரியா பயணித்த கார் விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை தேவி பிரியா (48). இவர் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மார்ச் 1 ஆம் தேதி) இரவு சென்னையில் இருந்து கார் மூலம் தேனியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இவரது காரை சென்னை ஐயப்பன்தாங்கலை சேர்ந்த முத்து கணேஷ் (38) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
மேலும் இவர்களுடன் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (36) என்பவரும் பயணித்துள்ளார். இவர்களது கார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருவாளக்குறிச்சி பிரிவுப் பாதை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் பஞ்சராகியுள்ளது. இதன் காரணமாக காரை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் முத்துகணேஷ், பஞ்சரான டயரை கழற்றி விட்டு, வேறு டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், எதிர்பாராத விதமாக நடிகை தேவி பிரியாவின் கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த திவாகர், பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த திவாகரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
| இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கை |
இந்த விபத்தில் காரை விட்டு இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்த நடிகை தேவி பிரியா, நல்வாப்பாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஓட்டுநர் முத்துகணேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகையின் கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

