ETV Bharat / state

’தலைவா ஆணையிடு, அண்ணாமலை மகுடம் சூட’ கோவையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக கடிதம் அளித்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.

அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 4:28 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் ’தலைவா ஆணையிடு, அண்ணாமலை மகுடம் சூட’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஓட்டியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், ஜூன் 4-ம் தேதி அவரின் பிறந்தநாள் அன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடலாம என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை தொடர்பான இந்த தகவல் தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் பேசுபொருளாகி உள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த காரசார கருத்து பகிர்வுகளும், ஆதரவு அலையும் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வருகிறது.

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள் (ETV Bharat Tamil Nadu)

இந்த சூழலில், இன்று (ஜூன் 3) கோவை மாநகரில் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "நீ இல்லாமல் எவர்க்கும் அரசியலும் இல்லை, அரியணையும் இல்லை. தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட..” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அண்ணாமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்படியான புகைப்படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: அமித் ஷா, நிதின் நபின் உடன் அண்ணாமலை சந்திப்பு; பாஜகவில் இருந்து விலக விருப்பம்

அரசியல் களத்தில் இல்லையென்றாலும், நடிகர் ரஜினிகாந்தின் கருத்தும், ஆதரவும் அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் அவரின் ரசிகர் மன்றத்தினர், அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்ணாமலைக்கு ஆதரவாக ஜிடி மேம்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்
அண்ணாமலைக்கு ஆதரவாக ஜிடி மேம்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள பேனர் (ETV Bharat Tamil Nadu)

அதேசமயம், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சார்பாக, அண்ணாமலையின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு "தலைவா! தரணி ஆள வா..!" என்று குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜிடி மேம்பாலம் அருகே பெரிய அளவிலான பேனரும் வைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவை சார்ந்த எந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்களும் இல்லாமல், அண்ணாமலை புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.