ETV Bharat / state

விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் அருண் ராஜ் உறுதி

புகார்கள் வரக்கூடிய இடங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு
அதிகாரிகளுடன் அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 3, 2026 at 4:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் உதவி சுகாதார அலுவலர்களுடன் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதார துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு சிறப்பாக சேவை அளிப்பது குறித்தும், கர்ப்பிணிகள் சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "மருத்துவத்துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை வளாகங்கள் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து கட்டமைப்புகளையும் சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய குப்பைகள் மற்றும் மரம் செடிகளை முழுவதுமாக அகற்றி அங்கு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் செவ்வாய்க்கிழமை பரிசோதனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு குரூப் யோகா தெரபி, இயற்கை மருத்துவ குறிப்பு என்ற புத்தகம் வெளியிட உள்ளது. இதை அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4 ஆண்டு 6 மாதம் வரை எம்பிபிஎஸ் படிப்பிற்கான கட்டணம் வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்வதாக புகார் வருகிறது.

புகார்கள் வரக்கூடிய இடங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட திட்டத்திற்கு புறம்பாக பணம் வசூலிக்கக் கூடாது. இரண்டு, மூன்று கல்லூரிகளுக்கு மேல் புகார் வந்துள்ளது. அவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை மீறி கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சாலை வசதி சரியில்லாத ஆத்தூர் போன்ற மலைப்பகுதிகளில் கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "சாலை வசதி இல்லாத பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்து தர போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.