நெல்லை ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருப்பம் - தம்பதி கைது
கொலை செய்யப்பட்டு கிடந்த தோட்டத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்திருந்ததால், செல்வத்தோடு மது அருந்திய நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Published : August 29, 2026 at 9:35 PM IST
திருநெல்வேலி: ஏ பிளஸ் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், கூட்டாளியே தனது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(எ) செல்வம் (வயது 41). ஏ பிளஸ் ரவுடியான இவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரி பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.
மேலும் செல்வம் மீது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏழு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்தாண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிலையில் அவரை காவல்துறையினர் காலில் சுட்டு பிடித்தனர்.
பிணையில் வெளியே வந்த செல்வம், நேற்று முன்தினம் கிராமத்தில் இருந்து தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த மனைவி கல்பனா, அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சென்ற நபர்கள், வெட்டுக்காயங்களுடன் செல்வம் தோட்டத்தில் கிடந்ததை பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கூடங்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த தோட்டத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்திருந்ததால், செல்வத்தோடு மது அருந்திய நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், செல்வத்தின் கூட்டாளியான கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்குளத்தைச் சேர்ந்த சந்துரு (வயது 26) தனது மனைவி கௌரியுடன் செல்வத்தை தோட்டத்தில் சந்திக்க சென்றது தெரியவந்தது. அப்போது குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பான பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மதுபோதையில் இருந்த சந்துரு, அரிவாளால் செல்வத்தை வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து சந்துரு மற்றும் அவரது மனைவி கௌரி இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூட்டாளி மனைவியுடன் கைதான சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

