மதுராந்தகம் அருகே 3 கல்லூரி மாணவர்கள் உயிரைப் பறித்த கார் டயர்!
கார் டயர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published : August 29, 2026 at 11:07 AM IST
சென்னை: மதுராந்தகம் அருகே காரின் டயர் வெடித்ததில் காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரியில் பயிலும் 7 மாணவர்கள் கார் மூலமாக பாண்டிச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று (ஆகஸ்ட் 28) இரவு சென்னையை நோக்கி தனியார் கல்லூரி மாணவர்கள் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த காரின் பின்புற டயரானது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துச் சிதறியது.
மதுராந்தகம் அருகே பயங்கரம் கார் டயர் வெடித்து விபத்து - 3 கல்லூரி மாணவர்கள் பலி#caraccident | #students | #death | #breakdown | #maduranthakam | #ETVBharatTamilNadu pic.twitter.com/HpEfqGVFw6
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) August 29, 2026
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 தனியார் கல்லூரி மாணவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் டயர் வெடித்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் படுகாயமடைந்த 4 மாணவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், காரின் டயர் வெடித்த விபத்தின் காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்த காவல்துறையினர், கார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
| இதையும் படிங்க: நீட் தேர்வு எழுதிய மாணவி விபரீத முடிவு - நெல்லையில் சோக சம்பவம் |
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கார் விபத்தில் ராஜ் பிரசாத், டியூட்டரின், தீபக் ஆகிய மூன்று தனியார் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், லோகேஸ்வரன், ஹரி கிருஷ்ணன், முனீஸ்வரன், ராம் பிரசாத் ஆகிய நான்கு மாணவர்களும் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில் திவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில், கார் விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

