ETV Bharat / state

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் விபரீத முடிவு; ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்

கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விக்னேஷ்
தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விக்னேஷ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 10:23 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் தாக்கிய இளைஞர், கைது நடவடிக்கைக்கு பயந்து விபரீத முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி, சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயோடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேபோல, அரியூர் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (19) என்ற இளைஞர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, தற்போது வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் அந்த மாணவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். அதனால், மாணவி கல்லூரிக்கு செல்லும் நேரங்களிலும், மாலையில் வீடு திரும்பும் போதும் என பின் தொடர்ந்து, காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி காதலுக்கு கண்டிப்பான முறையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதனால், ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ், மாணவி இன்று பிற்பகல் 12.30 மணியளவில், ராம்சேட் நகர் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிக்கும், விக்னேஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ்க்கு மாணவியின் பேச்சு கோவத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அதனால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாணவியின் கழுத்தை அறுத்து, இடது பக்க வயிற்றிலும் குத்தியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திலிருந்தும் தப்பிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 'மூச்சு விட முடியல..' பழுது ஏற்பட்டு 5 மணி நேரம் நின்ற விமானம்; மீண்டும் சிக்கலில் இண்டிகோ ஏர்லைன்ஸ்

அதில் பலத்த காயமடைந்த மாணவி, உடனடியாக பெற்றோரை செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு, பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர், ரத்த வெள்ளத்தில் மிதந்த மகளை மீட்டு, உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், மாணவி உயிரிழந்தால் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற பயத்தில் விக்னேஷ் தனது வீட்ற்கு சென்று விபரீத முடிவெடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியூர் போலீசார், விக்னேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.