''வன விலங்குகளுக்காக ஓர் அன்பு இல்லம்'' - கோவையில் உதயமான அதிநவீன சிகிச்சை மையம்
இந்த மையத்திற்கு பிரத்யேகமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், இருப்பார்கள். அது தவிர ஒரு வனச்சரகர் தலைமையில் வனப்பணியாளர்களும், வனவிலங்குகள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் போது அதனை கவனித்துக்கொள்ள அதற்கான தனி பணியாளர்களும் உள்ளனர்.

Published : January 6, 2026 at 11:11 PM IST
By: சீனிவாசன்
மனிதர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று காட்டி சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அதேப் போல் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்கினங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதன் அறிகுறியை கண்டு கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் 'காட்டு விலங்குகளுக்கு உடல்நல குறைவு என்றால் என்ன செய்யும்?' என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டுக்கொண்டோ.. என்னவோ.. வன விலங்குகளுக்காக கோவையில் அதிநவீன சிகிச்சை மையம் அமைத்து அவற்றின் மீதான அபரித அன்பை வெளிப்படுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
694 சதுர கி.மீ பரப்பளவில் கோவை வனக்கோட்டம்:
கோயம்புத்தூர் வனக்கோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடுகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

20 ஹெக்டர் பரப்பளவில் நவீன சிகிச்சை மையம்:
வனவிலங்குகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ வண்டலூர் மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியும். இதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஹெக்டர் பரப்பளவில் ரூ.19.50 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்கு சிகிச்சை அளிக்க கரோல் கூண்டு:
வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் ஆகியவற்றிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யானைகளுக்கு சிகிச்சை அளிக்க கரோல் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட கூண்டுகளும், விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் 16 கூண்டுகளும், யானைகளுக்கு தனியாக கரோல், குட்டி யானைக்கு தனி கரோல் அமைக்கப்பட்டுள்ளன. எந்தப் பகுதியில் வனவிலங்குகளுக்கு காயம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வனவிலங்குகளுக்காக அறுவை சிகிச்சை மையம்:
மேலும் வனவிலங்குகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வசதியாக அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளும், வன ஊழியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் தங்குமிடம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மையம் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரத்யேக மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள்:
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''சுமார் 20 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள வனவிலங்கு சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையத்திற்கு பிரத்யேகமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், இருப்பார்கள். அது தவிர ஒரு வனச்சரகர் தலைமையில் வனப்பணியாளர்களும், வனவிலங்குகள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் போது அதனை கவனித்துக் கொள்ள அதற்கான தனி பணியாளர்களும் உள்ளனர்.
உடல் பரிசோதனைக்கு அதிநவீன எக்ஸ்ரே மெஷின்:
இவர்கள் அனைவரும் சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே தங்கும் வகையில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் உடல்நலம் பாதிக்கப்படும் போது அல்லது விபத்தில் சிக்கினாலும் இங்கு கொண்டு வந்து அதற்கு சிகிச்சைகள் அளிக்க அனைத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன எக்ஸ்ரே மெஷின்களும் வாங்கப்பட்டுள்ளது. யானைகளை மரக்கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்க இரண்டு விதமான மரக் கூண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை தர விலங்குகளுக்கு தனித்தனி கூண்டுகள்:
ஒவ்வொரு விலங்குகளுக்கென தனித்தனி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை வனக்கோட்டம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை காப்பகம் என, பல்வேறு இடங்களில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட வன விலங்குகள் இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கலாம்'' என்று கூறினார்.

