ETV Bharat / state

EXCLUSIVE: மாதம் ரூ.2 லட்சம் வரை வருமானம்; சுடுமண் கைவினைக் கலையில் அசத்தும் திருநங்கை

வீட்டில் மாட்டப்படும் சுவர் ஓவியங்களான வால் மியூரல் ஓவியங்களை ஆர்டர்களை பொருத்து சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொடுத்து வருகிறோம் என பிரகதி கூறுகிறார்.

சுவர் ஓவியத்தில் ஈடுபட்ட பிரகதி
சுவர் ஓவியத்தில் ஈடுபட்ட பிரகதி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 8, 2025 at 3:00 PM IST

5 Min Read
Choose ETV Bharat

BY - சுபாஷ் தயாளன்

செங்கல்பட்டு: “இந்த தொழிலில் மாதம் சுமார் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறேன். என் குடும்பத்தை நானே கவனித்து வருகிறேன். திருநங்கையாக மாறும் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்காமல் அவர்களுக்கு பக்க பலமாக இருந்தால், என்னை போல பலரும் ஏதோ ஒரு துறையில் நிச்சயமாக சாதிப்பார்கள்” என்கிறார் திருநங்கை பிரகதி.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சித்தமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான திருநங்கை பிரகதி. இவர் கவின் அரசு கலைக் கல்லூரியில் சுடுமண் கலையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரகதி தான் படித்த சுடுமண் கலையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தோடு மட்டுமல்லாமல், சுடுமண் கலைக்கு உயிர் கொடுத்தும், சுயமாகத் தொழில் தொடங்கி வருமானம் ஈட்டியும் மற்ற திருநங்கைகளுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

இதனை அறிந்து நேரடியாக ஈடிவி பாரத் சார்பாக பிரகதியை நேரில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில், என்ன மாதிரியான கைவினைப் பொருட்களை அவர் செய்கிறார்? அதனை எப்படி விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்? அவரின் கோரிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் நமக்கு விளக்கினார்.

பிரகதியின் ஃபைன் ஆர்ட்ஸ் அகடமி
பிரகதியின் ஃபைன் ஆர்ட்ஸ் அகடமி (ETV Bharat Tamil Nadu)

அழகாய் இருக்கே...

சுடுமண் கலை என்பது களிமண் கொண்டு ஒரு பொருளை கையால் செய்து, அதனை நெருப்பில் சுட்டு வண்ணங்கள் தீட்டி விற்பனைக்கு கொண்டு செல்வது வரை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடக்கும் பணி. ஆனால், நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பிரகதி நமக்காக சிறிய ஆலமரம் ஒன்றின் கீழ் மயில், பூச்செடிகள் இருப்பது போன்ற சுவர் ஓவியம் ஒன்றினை இரண்டு மணி நேரம் அமர்ந்து கைப்பட செய்து முடித்து காட்டினார்.

அந்த ஓவியத்தை கையில் வைத்துக்கொண்டு பேசத் தொடங்கிய பிரகதி, “எனக்கு சிறு வயதில் இருந்தே களிமண்ணால் பொம்மைகள் செய்வது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது போன்றவற்றிலெல்லாம் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சுடுமண் கலையில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தை வீட்டில் தெரிவித்தேன். எனது பெற்றோரும் அதை ஏற்றுக்கொண்டு, “உனக்கு என்ன விருப்பமோ அதை படித்துக் கற்றுக்கொள்” என்று சொன்னார்கள். இதையடுத்து சுடுமண் கலையில் இளங்கலை மற்றும் முதுகலை என பட்ட படிப்புகளை படித்து முடித்துவிட்டு பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து சுயமாக தொழில் செய்துவருகிறேன்” என பெருமையுடன் தெரிவித்தார்.

பிரகதி மற்றும் குழுவினர்
பிரகதி மற்றும் குழுவினர் (ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல விழாக்கள் கொண்டாடப்படும். அதனால் அதற்கேற்றாற்போல கைவினை பொருட்களை செய்து விற்பனை செய்து வருகிறார் பிரகதி. குறிப்பாக பொங்கல் பண்டிகை காலங்களில் மண் பானைகள் மற்றும் மண் அடுப்பு, விநாயகர் சதுர்த்தி நேரங்களில் விநாயகர் சிலைகள், நவராத்திரி நேரங்களில் கொலு பொம்மைகள், கார்த்திகை தீபம் சமயத்தில் அகல் விளக்குகள் ஆகியவற்றை பாரம்பரிய முறைப்படி கைகளாலேயே செய்து ஆன்லைன் மூலமாகவும், ஸ்டால்கள் அமைத்தும் விற்பனை செய்து வருகிறார்.

திருநங்கைகள் நலனுக்காகவும் முன்னெடுப்பு

மேலும், களிமண்ணால் செய்யப்படும் பொருட்களை இன்னும் மேம்படுத்தி அதன்மூலம் தொழில் வாய்ப்புகள் இருப்பதை உருவாக்க, அனைத்துப் பொருட்களையும் கையால் மட்டுமே செய்து வருவதாகவும் கூறுகிறார். இப்போது பலவித மாடல்கள் மற்றும் டிசைன்களில் விதவிதமாக பொருட்களை உருவாக்கி அவற்றை விற்றுவரும் இவர், சுடுமண் கலை என்ற பாரம்பரிய தொழிலை இன்னும் மேம்படுத்த, அரசின் உதவி மூலம் 'வெற்றிப்பாதை திருநங்கையர்' என்னும் சுய உதவிக் குழுவையும் தொடங்கி நடத்தி வருவதாக கூறுகிறார்.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் (ETV Bharat Tamil Nadu)

இந்தக் குழுவில் ஐந்து திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தான் படித்த சுடுமண் கலை பற்றி எடுத்துக் கூறி, அவர்களுக்கு கைவினைப் பொருட்களை செய்வதற்கான பயிற்சிகளையும் வழங்கி வரும் பிரகதி, அவர்கள் மூலமும் கைவினைப் பொருட்களை செய்து, அவர்களுக்கு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரகதி, “நாங்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், arrowmarket.in என்ற இணையதளம் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறோம். மேலும், வீடுகளின் உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்புகளில் சுடுமண் கலையில் கைவினை அலங்காரப் பொருட்களை ஆர்டர் மூலம் செய்து வருகிறேன். வீட்டின் சுவர்களை அழகுப்படுத்தும் வால் மியூரல் எனப்படும் ஓவிய வடிவமைப்புகளையும் செய்து கொடுத்து வருகிறோம்.

இதனை கஸ்டமர் கொடுக்கும் ஆர்டருக்கு ஏற்றபடி என்ன டிசைன் வேண்டும்? என்ன மாதிரியான வடிவில் வேண்டும்? என அனைத்தையும் கேட்டு, அதை களிமண்ணால் செய்துகொடுக்கிறோம். வண்ணமயமாக கேட்போருக்கு வண்ணங்கள் தீட்டியும், மணற்சிற்பம் போல் இயற்கையாக தெரியவேண்டும் என கேட்போருக்கு அதற்கேற்றாற்போலும் செய்து கொடுத்து வருகிறோம். மேலும் வீட்டில் வைக்க அலங்கார பொருட்களையும் செய்து கொடுக்கிறோம்” என்கிறார்.

சுடுமண் கைவினைக் கலையில் அசத்தும் திருநங்கை (ETV Bharat Tamil Nadu)

என் குடும்பத்தை நானே கவனித்து வருகிறேன்

வருமானம் குறித்து பேசிய அவர், “வீட்டில் மாட்டப்படும் சுவர் ஓவியங்களான வால் மியூரல் ஓவியங்களை சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆர்டர்களை பொருத்து கொடுத்து வருகிறோம். ஓவியங்களின் அளவு பொருத்து விலையும் மாறுபடும். மறைமலைநகர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் என்னிடம் நேராகவே வந்து ஆர்டரை கொடுத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் மாதம் சுமார் 50 ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறேன். இதை வைத்து என் குடும்பத்தை நானே கவனித்து வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரகதி.

தொடர்ந்து, “தி ஏரோ ஃபைன் ஆர்ட்ஸ் & கிராப்ட் அகாடமி''யை உருவாக்கி அதன் மூலம் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி கொடுத்து வருகிறேன். மேலும் அரசு சார்பில் நடத்தப்படுகிற சம்மர் கேம்ப்களிலும் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் களிமண்ணால் பொம்மைகள் செய்தல் குறித்தும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

ஆனால் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு இட வசதி தான் எங்களுக்கு பிரச்சினையாக உள்ளது. இப்போது இருக்கிற இடத்தில் மழைக்காலங்களில் பொருட்களை செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு தனியாக இட வசதியோ அல்லது குடோனோ கட்டிக் கொடுத்தால் சுடுமண் கலை என்ற பாரம்பரிய தொழிலை மேம்படுத்தவும், இன்னும் பல்வேறு திருநங்கைகளுக்கு பயிற்சி கொடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எங்களால் முடியும்” என்கிறார்.

மனநிறைவோடு செய்கிறேன்

சுடுமண் கலை எனக்கு மிகவும் பிடித்த துறை என்பதால் மனநிறைவோடு இந்த வேலையில் நான் ஈடுபட்டு வருகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் தொழில் செய்யும் பலரும் நலிந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு அவர்களுக்கு கை கொடுத்து உதவி மேலே கொண்டுவருவதன் மூலம் இந்த பாரம்பரிய சுடுமண் கலை துறை மேம்படும். இன்னும் நிறையப்பேர் ஆர்வத்துடன் இந்த துறையில் சாதிப்பார்கள். மேலும், திருநங்கையாக மாறும் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்காமல் அவர்களுக்கு பக்க பலமாக இருந்தால் அனைவருமே ஏதோ ஒரு துறையில் நிச்சயமாக சாதிப்பார்கள்'' என்றார்.

அவர்களை ஒதுக்கிவிட வேண்டாம்

திருநங்கை பிரகதிக்கு பக்கபலமாக இருக்கும் அவரது தாய் லோகம்மாவிடம் பேசினோம். அப்போது அவர், “எனது மகன் கல்லூரி படிக்கும் பொழுது திருநங்கையாக மாறினார். ஆனால் அதை அவர் எங்களிடம் வெளிப்படுத்தவில்லை. கல்லூரி முடியும் தருவாயில்தான் நாங்கள் அதை கண்டுபிடித்தோம். ஆனால் நாங்கள் எந்த ஒரு வெறுப்பும் காட்டாமல் அவரிடம் பொறுமையாக எடுத்துக் கூறினோம். ‘இதற்கு நீ என்ன செய்வாய்? நீ எங்களை விட்டு எங்கும் செல்லக்கூடாது. நாங்கள் உன்னை எதுவும் சொல்ல மாட்டோம். உன்னை நாங்கள் பாதுகாப்பாக வளர்ப்போம்’ எனக் கூறி மனதளவில் தைரியத்தை கொடுத்தோம்.

மேலும், ‘உனக்குப் பிடித்த துறையில் நீ படித்து அந்த தொழிலை செய். நாங்கள் உன்னுடன் இருப்போம்’ என்றோம். இதனால் பிரகதி சுடுமண் கலையில் முதுகலை பட்டம் படித்துவிட்டு தற்போது அதில் கைவினைப் பொருட்களை செய்து விற்பனை செய்து வருமானம் ஈட்டி எங்கள் குடும்பத்தையே கவனித்து வருகிறார்.

குடும்பத்தில் யாராவது திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ மாறினால் பெற்றோர்கள் அவர்களை ஒதுக்கிவிட வேண்டாம். தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல், தன்னம்பிக்கையுடன் படித்து சாதனை படைத்து பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள்'' என தாயுள்ளத்தோடு தெரிவித்த லோகம்மாவிற்கு நன்றி கூறி அங்கிருந்து விடைபெற்றோம்.

இதையும் படிங்க:

1. தென் மாவட்டங்களின் அடையாளமாக திகழும் ஏவி மேம்பாலம் - 139 ஆண்டுகள் கடந்த நிலையில் சீரமைக்குமா அரசு?

2. ‘பரங்குன்று’ என்ற திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஸ்தலத்தின் வரலாறும், சர்ச்சையும்