முதல்வர் சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு
முதல்வர் ஸ்டாலின் பயணித்த வாகனம் மதுரை கூத்தியார்குண்டு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனத்தின் டயர் வெடித்தது.

Published : January 7, 2026 at 3:33 PM IST
மதுரை: விமான நிலையம் போகும் வழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணித்த காரின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், புதிய நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக ரூ.1595 கோடியில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 111 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை, மின்சாரம், வருவாய் உள்ளிட்ட ஏழு துறைகளுக்கு ரூ.174.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 50 புதிய பேருந்து சேவைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு காரில் சென்றார். முதல்வர் பயணித்த வாகனம் மதுரை கூத்தியார் குண்டு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனத்தின் டயர் வெடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு முதல்வர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு சென்றார்.

