ETV Bharat / state

EXCLUSIVE: அழிந்து போன கண்மாயை சீரமைத்து விவசாயம்... கணவனை இழந்த இஸ்லாமிய பெண்களின் புரட்சி!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் தூர்ந்து போய் புதர் மண்டிய கண்மாயை சீரமைத்து, விவசாய பணிகளில் களமிறங்கியுள்ள கணவனை இழந்த 52 இஸ்லாமிய பெண்களின் சாதனையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஜரீனா
ஜரீனா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 13, 2025 at 4:04 PM IST

4 Min Read
Choose ETV Bharat

- BY இரா. சிவக்குமார்

"இது எங்கள் முன்னேற்றத்திற்கானது. இத்தனை ஆண்டு காலமாக கூலி வேலைக்கு தான் வெளியே சென்று கொண்டிருந்தோம். தற்போது ஜமாத் மூலமாக நல்ல வழியை காட்டி உள்ளார்கள். நெல், கடலை, காய்கறி என எது சாத்தியம் உள்ளதோ அதனை பயிரிடுவோம்" என்று பெருமையுடன் கூறினார் ஜரீனா.

புதுக்கோட்டை: கரோனா பெருந்தொற்று காலத்தில் கணவனை இழந்த இஸ்லாமிய பெண்கள் ஒருங்கிணைந்து, தங்களது கிராமத்தில் தரிசாக கிடந்த நிலத்தை செம்மை செய்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டு பாவா பள்ளிவாசல் எனும் குக்கிராமம். இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் ஏறக்குறைய 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு செட்டிநாட்டு மரபு சற்றே பின்னிப்பிணைந்து கிடக்கிறது. இந்த ஊரில் உள்ள காட்டுபாவா சாஹிப் பள்ளிவாசல், கி.பி.1516 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

காட்டுபாவா சாஹிப் பள்ளிவாசல்
காட்டுபாவா சாஹிப் பள்ளிவாசல் (ETV Bharat Tamil Nadu)

இது இஸ்லாம் மார்க்கத்தின் மகான் புனித இறைநேசர் பாவா பக்ருதீன் என்பவரது அடக்கஸ்தலம். இங்கு நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா உள்பட பல்வேறு நிகழ்வுகளில் இந்து மக்களின் பங்களிப்பு அதிகமாக உண்டு. அதே போன்று இந்த ஊருக்கு அருகே உள்ள திருமெய்யபுரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களும் பள்ளிவாசல் ஜமாத்தோடு நெருங்கிய நட்புறவு வைத்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் காட்டு பாவா பள்ளிவாசல் ஜமாத் அண்மையில் பெண்களுக்காக புரட்சிகரமான திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

காட்டுபாவா பள்ளிவாசல் கிராமத்தில் புதுக்கண்மாய் மற்றும் பட்டு கண்மாய் என்ற பெயர்களில் இரண்டு முக்கிய நீர்நிலைகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் சிதிலமடைந்து கிடந்த இந்த இரண்டு கண்மாய்களும் ஜமாத்தின் முயற்சியால் சீரமைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சுமார் 750 மீட்டர் நீளம் கொண்ட புதுக்கண்மாய் இருந்த இடமே தெரியாமல் மேடு தட்டி புதர் மண்டி கிடந்த நிலையில் அதனை ரூ.3 லட்சம் செலவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 52 பெண்கள் தங்களது உழைப்பை நல்கி சீரமைத்து சாதனை படைத்துள்ளனர்.

கண்மாய்
தூர்வாரப்பட்ட கண்மாய் (ETV Bharat Tamil Nadu)

இதற்கு டெல்லியை தலைமையிடமாக கொண்ட பிரதான் என்ற நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசனைகளோடு நிதி உதவியும் செய்து, வழிகாட்டி உள்ளது. அந்த குறிப்பிட்ட 52 பெண்களும் கண்மாயில் பெருகும் தண்ணீரைக் கொண்டு தங்களது பாரம்பரியமான விவசாயப் பணிகளை தொடங்க உள்ளார்கள் என்பது தான் இதில் சிறப்புக்குரிய செய்தி. குறிப்பிட்ட 52 பெண்களும் கணவனை இழந்தவர்கள் என்பது அதை விட முக்கியமானது.

இவர்களின் சுயமரியாதையான வாழ்க்கைக்கும், நீடித்த வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் காட்டுபாவா பள்ளிவாசல் ஜமாத் முன்னின்று இந்த வழிகாட்டலை ஏற்படுத்தி தந்துள்ளது.

இது குறித்து ஜமாத்தின் தலைவர் முகமது அலி ஜின்னா கூறுகையில், ''கிராமத்தில் உள்ள புது கண்மாயை தூர் வார முடிவெடுத்ததற்கு காரணமே, எங்கள் ஊரில் உள்ள கணவனை இழந்த 52 பெண்களின் முன்னேற்றத்திற்காக தான். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜமாத்தில் இந்த கருத்தை முன் வைத்த போது பெண்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர்.

முகமது அலி ஜின்னா
ஜமாத் தலைவர் முகமது அலி ஜின்னா (ETV Bharat Tamil Nadu)

கண்மாயின் உட்புறம் ஆழப்படுத்தி கரைகள் உயர்த்தப்பட்டு மடைகள் சீரமைக்கப்பட்டன. மழை பெய்து தண்ணீர் நிரம்பி விட்டால், பெண்கள் அனைவரும் வேளாண் பணிகளை தொடங்கி விடுவார்கள். புதர் மண்டி கிடந்த இந்த கண்மாயை பிரதான் நிறுவனத்தின் உதவியால் சீரமைத்துள்ளோம். இது மானாவாரி கண்மாய் என்பதால் மழை மட்டும் தான் ஒரே நீர் ஆதாரம்.

750 மீட்டர் நீளம் கொண்ட இந்த கண்மாயின் மூலமாக 50 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்புப் பணி செலவில் ஜமாத்தின் பங்கு மூன்றில் ஒரு பங்காகும். தற்போதைக்கு நெல் விவசாயம் மட்டும் தான். தேவைப்பட்டால் மற்ற பயிர்களும் பயிரிடப்பட வாய்ப்பு உண்டு'' என்கிறார்.

இந்த கிராமத்தில் உள்ள ஆண்களில் பலர் வெளிநாடுகளில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பெண்கள் பக்கத்து கிராமங்களில் 100 நாள் வேலைக்கும், கூலி வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். அதன் மூலம் தங்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை கவனித்துக் கொள்கின்றனர்.

ஜரினா என்பவர் கூறுகையில், ''தற்போது தான் கண்மாயை தூர்வாரி சுத்தம் செய்துள்ளோம். இப்போது மழை இல்லாத காரணத்தால் கண்மாய் நிரம்பவில்லை. கண்மாய் நிரம்பி விட்டால் விவசாயப் பணிகளை தொடங்கி விடுவோம். இது எங்களுடைய முன்னேற்றத்திற்கானது. இத்தனை ஆண்டு காலமாக கூலி வேலைக்கு தான் வெளியே சென்று கொண்டிருந்தோம். தற்போது ஜமாத் மூலமாக நல்ல வழியை காட்டி உள்ளார்கள். நெல், கடலை, காய்கறி என எது சாத்தியம் உள்ளதோ அதனை பயிரிடுவோம்' என்றார்.

வயது மூப்பு காரணமாக கணவனை இழந்தவர்கள் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு கோர தாண்டவம் ஆடிய கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இங்குள்ள வயதான ஆண்கள் காலமானதால், அதிகமான பெண்கள் இங்கு கைம்பெண்களாகினர். அவர்களின் எதிர்கால வாழ்வியலை கருத்தில் கொண்டு தான் காட்டுபாவா பள்ளிவாசல் ஜமாத் துணிச்சலாகவும் முற்போக்கு சிந்தனையுடனும் அப்பெண்களை விவசாயம் செய்ய ஊக்குவித்துள்ளது.

இதையும் படிங்க: தூங்கா நகரம் குப்பை நகராக சீரழிந்த கதை - கண்ணீர் வடிக்கும் மாமதுரை!

நிஷா என்பவர் கூறுகையில், ''ஆதரவற்ற பெண்களின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான் எங்கள் ஜமாத் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. ஜமாத் அளித்த உறுதியின் காரணமாக தான் இந்த பெண்கள் அனைவரும் இங்கே ஒருங்கிணைந்துள்ளனர். நாங்கள் மேற்கொள்ளும் விவசாயம் என்பது முதலில் எங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளத் தான். பிறகு தான் அதனை விற்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

வேளாண் பொறியாளர் கனகவல்லி
வேளாண் பொறியாளர் கனகவல்லி (ETV Bharat Tamil Nadu)

பிரதான் நிறுவனத்தின் சார்பாக திருமயம் பகுதியில் பணி செய்யும் வேளாண் பொறியாளர் திருநிறை கூறுகையில், ''திருமயம் தாலுகாவில் மொத்தம் 32 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகளை தான் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் காட்டுபாவா பள்ளிவாசல் ஜமாத்தை அணுகிய போது தான் இங்கு இரண்டு கண்மாய்கள் 30-40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதை அறிந்தோம். இதில் புது கண்மாய்க்கான ஆயக்கட்டுகள் விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாக கிடந்த நிலையில், அதனை முதலில் சீரமைத்துள்ளோம்.

அழிந்து போன கண்மாயை மீட்டெடுத்த பெண்கள் (ETV Bharat Tamil Nadu)

இந்த ஆயக்கட்டுகள் அனைத்தையும் ஊரில் உள்ள கணவனை இழந்த 52 பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து சீரமைத்தோம். ஜமாத்தின் சார்பில் அந்த விவசாய நிலங்கள் அனைத்தும் மேற்கண்ட 52 பெண்களுக்கு குத்தகையாக வழங்கப்பட்டுள்ளன. பட்டுக் கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு கரைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பெண்கள் மேற்கொள்ளும் விவசாயத்தின் மூலமாக தரிசாய் கிடந்த நிலங்கள் அனைத்தும் இனி வளம் பெற வாய்ப்பு உண்டு'' என்கிறார்.

மேலும் பிரதான் நிறுவனத்தின் நீர்நிலை மேம்பாட்டு பணிகளில் அணி தலைவராக உள்ள வேளாண் பொறியாளர் கனகவல்லி கூறுகையில், ''பொதுவாக நீர்நிலை மற்றும் விவசாய மேம்பாட்டு பணிகளில் ஆண்களின் பங்கேற்பு தான் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கு மாறாக காட்டுபாவா பள்ளிவாசல் கிராமத்தில் குறிப்பிட்ட ஜமாத், பெண்களை அதிலும் குறிப்பாக கணவனை இழந்த பெண்மணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி இருப்பது வரவேற்பிற்குரியது.

பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்பதை நோக்கி நமது சமூகம் மெல்ல நகரும் சமயத்தில், இது போன்ற முன்னுதாரணங்கள் இன்னும் வேகமாக அவர்களை செயல்படத் தூண்டும் என்பது தான் உண்மை. படித்த பெண்களை விட படிக்காத பாமர பெண்களை அதிகாரத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம்'' என்றார்.