இது பார்க்-ஆ இல்ல ரிசார்ட்- ஆ: வண்டலூரில் சத்தமின்றி செயல்படும் பசுமை உலகம்.. அப்படி என்ன சிறப்பு?
சென்னையில் பலருக்கும் பரவலாக அறிமுகமாகாத ஒரு பசுமை உலகம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகிலேயே அமைதியாக இயங்கி வருகிறது.

Published : February 24, 2026 at 8:31 PM IST
- By சுபாஷ் தயாளன்
"வெறும் 10 ரூபாய்க்கு பல்வேறு மூலிகை செடிகளும் விற்பனைக்காக வைத்துள்ளோம். பூங்கா முழுவதும் சுற்றி பார்க்க, பேட்டரி வாகன வசதியும் உள்ளது. ஆனால், நுழைவு கட்டணம் ரூ.20 மட்டுமே என்கிறார்" - வனத்துறை அலுவலர் சேகர்
சென்னை வண்டலூர் என்றாலே பெரும்பாலான மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது உயிரியல் பூங்கா தான். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு சஃபாரி, பட்டாம்பூச்சி பூங்கா, மீன் காட்சியகம் மற்றும் பல அரிய வகை பறவைகள், விலங்குகளும் உள்ளது. இதனை காண்பதற்காகவே, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
ஆனால், அதே பூங்காவிற்கு அருகிலேயே பலருக்கும் தெரியாமல், வனத்துறை கட்டுப்பாட்டில் ஒரு 'பசுமை உலகம்' செயல்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் வன மரபியல் வள மர பூங்கா. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, வெறும் பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல், தாவரவியல் கல்விக்கான திறந்த ஆய்வகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மனதை லயிக்க வைக்கும் சூழல்

குறிப்பாக, அரிதான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மர இனங்களை பாதுகாக்கும் ஒரு தனித்துவ பசுமை இடமாகவும், 300-க்கும் மேற்பட்ட மர இனங்கள், மூங்கில் தோட்டம் மற்றும் ஆல/அரச மர வகைகளை கொண்ட தாவரவியலாளர்களின் சொர்க்கமாகவும் திகழ்கிறது. இது சென்னையில் உள்ள பலருக்கு இன்னும் தெரியாது. இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் ஈடிவி பாரத் ஊடகக்குழு சார்பாக, வண்டலூர் வன மரபியல் வள மர பூங்காவிற்கு பயணப்பட்டோம்.
அப்போது, அந்த பூங்காவின் வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) சேகர் நம்மை உற்சாகத்தோடு அழைத்து, பூங்கா முழுவதையும் சுற்றிக்காட்டி, அதன் சிறப்பம்சங்களை விவரித்தார். பூங்காவிற்குள் நுழைந்தவுடனேயே சென்னை நகரத்தின் சத்தம் மெதுவாக மறைந்து, மரங்களின் நிழலும், காற்றின் வாசமும், பறவைகளின் கீச் கீச் சத்தமும் மனதை லயிக்க செய்தது.
ஒரே இடத்தில் இத்தனை சிறப்பா!

தொடர்ந்து நம்மிடம் பேச தொடங்கிய வன அலுவலர் சேகர், “சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது, கிழக்கு தொடர்ச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300 அரியவகை மரங்கள் மற்றும் தாவரங்கள் ஒரே இடத்தில் வளர்க்கப்படும் பூங்காவாகவும் திகழ்கிறது.
சுமார் ரூ.2 கோடி செலவில், 2018ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தாவர வகைகள் மட்டுமே இருந்தது. தற்போது, அனைத்து வளர்ந்து ஒரு காடாகாவே காட்சியளிக்கிறது. குறிப்பாக, கருங்காலி, நீர் மருது, சந்தனம், செம்மரம், தேக்கு, மஞ்சள் கடம்பு, லவங்கம் மரம் போன்ற மூங்கில் மர வகைகள், பழ வகைகளை சேர்ந்த மரங்கள் உள்ளிட்ட அரிய மர வகைகள் உள்ளது” என்று ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்தார்.

இதுமட்டுமா என பேசத் தொடங்கிய அவர், “இந்த பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளையும், குழந்தைகளையும் கவரும் வண்ணம் பட்டாம்பூச்சி தோட்டம், மூலிகை கார்டன், மூங்கில் ஆராய்ச்சி பகுதி, குழந்தைகளுக்கான விளையாட்டு தளம், நிழலான நடைபாதைகள், செல்ஃபி பாயிண்ட்கள் மற்றும் பிரத்தியேகமான இருக்கைகள் அமைக்கப்பட்டு, குடும்பத்துடன் வரும் நபர்களுக்கு சிறந்த ஓய்வெடுக்கும் இடமாகவும் செயல்படுகிறது.
வெறும் 10 ரூபாய்க்கு மூலிகை செடி
பார்வையாளர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் டிஜிட்டல் கட்டண வசதிகளும் உள்ளது. பூங்கா முழுவதும் சுற்றி பார்க்க, பேட்டரி வாகன வசதியும் உள்ளது என்றால் பாருங்களேன். வெறும் 10 ரூபாய்க்கு பல்வேறு மூலிகை செடிகளும் விற்பனைக்காக வைத்துள்ளோம். அதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த மரபியல் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காவை செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் செயல்படும்.
கட்டண விவரம்
இவ்வளவு சிறப்பம்சங்களும், மன நிம்மதியும் அளிக்கும் இந்த பூங்காவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூல் செய்யப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. காலை 9 மணி - 5.30 மணி வரை திறந்திருக்கும். மேலும், காலை மற்றும் மாலையில் நடைபயிற்சிக்காக 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக, ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.
| இதையும் படிங்க: தண்ணீர் இல்லாமல் நடக்கும் தெப்பத் திருவிழா - கூடலழகர் கோயிலுக்கு விடிவு காலம் எப்போது? |
அதுவே, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தாவரவியல் மாணவர்களை கல்வி நிர்வாகத்தினர் அழைத்து வரும்போது, அவர்களுக்கு இலவசமாகவே பூங்கா முழுவதையும் சுற்றிக்காட்டி, தாவரங்களின் பெயர்களையும் கற்பிப்போம். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக இங்குள்ள ஒவ்வொரு தாவரத்துக்கும், அதன் தாவரப்பெயர் மற்றும் அறிவியல் பெயர் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது” என்றார் சேகர்.
வாழ்நாளில் ஒருமுறையாவது விசிட் அடிக்க வேண்டிய இடம்
சென்னையில் உணவே 20 ரூபாய்க்கு வாங்க முடியாது. ஆனால், அமைதியான பசுமை நிறைந்த ஒரு இயற்கை உலகை 20 ரூபாய்க்கு காண முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு. பொழுதுபோக்கிற்காகவே வண்டலூர் உயிரியல் பூங்காவை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கக் கூடும். ஆனால், அதன் பின்னாலேயே இயற்கையையும், கல்வியையும் இணைத்திருக்கும், இந்த வன மரபியல் வள மரப் பூங்கா சமீபத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே, பசுமை போர்த்தி காணப்படும் இது, கரம் கோர்ப்போம் அறக்கட்டளையின் மூலம் மேலும் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இயற்கை பிரியர்கள் மட்டுமின்றி, அனைவரும் கண்டிப்பாக ஒருமுறை பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக இது திகழ்கிறது என்றால் மிகையாகாது.

