ETV Bharat / state

17 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு புதுப்பொலிவு பெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு வரலாறு

மீனாட்சியம்மன் கோவில் சுமார் 700 ஆண்டு காலத்திற்கும் மேலாக பாண்டிய பேரரசர்கள், நாயக்க மன்னர்கள், செல்வந்தர்கள், பக்தர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஆகமொத்தம் மீனாட்சி அம்மன் கோயில் என்பது பல தலைமுறைகளின் கூட்டு பாரம்பரிய சின்னமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 8:15 PM IST

5 Min Read
Choose ETV Bharat

- BY இரா. சிவக்குமார்

'தூங்கா நகரம்' என்றழைக்கப்படும் மதுரை என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தான். அப்படி மதுரையின் அடையாளமாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயில், வருகின்ற செப்டம்பர் மாதம் குடமுழுக்கு காண தயாராகிறது.

17 ஆண்டுகளுக்கு பிறகு

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, பல காரணங்களால் குடமுழுக்கு தள்ளிப்போன சூழலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வைபவம் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் குடமுழுக்கு திருவிழாவை உலகத் தமிழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.32.28 கோடியும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் பாதிப்படைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக ரூ.35.30 கோடியும் என மொத்தம் ரூ.67.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 95% பணிகள் நிறைவுற்ற நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் குடமுழுக்கு நடைபெறக்கூடும் என கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (ETV Bharat Tamil Nadu)

தீவிரமடையும் புதுப்பிப்பு பணிகள்

அனைத்து முக்கிய கோபுரங்களின் திருப்பணி, கலசங்கள் சீரமைப்பு, சுதை சிற்பங்கள் மற்றும் கற்சிற்பங்கள் பாதுகாப்பு, வண்ண ஓவியங்கள் புதுப்பிப்பு, பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் பழுதுபார்ப்பு, வீரவசந்தராயர் மண்டபம் மறுகட்டுமானம், மழைநீர் வடிகால் மற்றும் கட்டடப் பாதுகாப்பு, ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கு முன்னேற்பாடு என அனைத்து பணிகளும் கோயிலுக்குள்ளும், வெளியேயும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை

1923, 1963, 1974, 1995 மற்றும் 2009 என கடந்த 100 ஆண்டுகளில் 5 குடமுழுக்குகள் நடைபெற்று, தற்போது 6-வதாக 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

ஆகமத்தின்படி, பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலை போன்ற மிகப்பெரிய கோவில்களில், பெருமளவிலான திருப்பணிகள் நிறைவடையும் காலம், ஆகம அறிஞர்களின் ஆலோசனை, நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் கட்டட பராமரிப்புப் பணிகள் போன்ற காரணங்களால் 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலை ஏற்படுகிறது.

சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சிதைந்து போனது. அதன் சீரமைப்புக்கான பணிகளும் குடமுழுக்கு தள்ளிப்போனதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதுவரை நடந்த குடமுழுக்குகள்

கிபி 1559 - 1563 ஆண்டுகளில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் மிகப்பெரியதாக விரிவுபடுத்தப்பட்டது. அந்த திருப்பணிகள் முடிந்தபின் குடமுழுக்கு நடைபெற்று இருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோன்று கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், நாயக்கர் ஆட்சியில் அமைச்சராகவும், தளபதியாகவும் இருந்த அரியநாத முதலியார் மண்டபங்கள், பிரகாரங்கள் உள்ளிட்ட பலவற்றை கோயிலுக்குள் உருவாக்கினார். இதற்கு பிறகும் கூட கோயில் குடமுழுக்கு நடைபெற்று இருக்கலாம்.

மேலும், கி.பி.1623 - 1659 திருமலை நாயக்கர் காலத்தில் புதுமண்டபம், கோபுரப் பணிகள், பொற்றாமரை குளம் போன்ற பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. அவரது காலத்திலும் குடமுழுக்குகள் நடைபெற்றிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பின்னர், கி.பி.18 நூற்றாண்டிலும் கோயிலுக்குள் பராமரிப்பு மற்றும் திருப்பணிகள் நடைபெற்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பணி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பணி (ETV Bharat Tamil Nadu)

2009-ல் 29 கிலோ தங்கம்

ஆனால், முறையாக ஆவணங்களுடன் முதல் திருக்குடமுழுக்கு 1878ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்து, கோயில் திருப்பணி உள்ளிட்ட குடமுழுக்கை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. அவர்கள் காலத்தில்தான் அனைத்து கோபுரங்களின் உச்சியிலும் தங்க கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.

1923ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டு திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் காலத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

1974ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி காலத்திலும், 1995ஆம் ஆண்டு ஜெயலலிதா, 2009ஆம் மீண்டும் கருணாநிதி காலத்தில் குடமுழுக்குகள் நடைபெற்றன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழக்கின்போது அம்மன் விமானம் முழுவதும் தங்கத்தால் மூடப்பட்டது. அச்சமயம் சுமார் 1,150 கிலோ செம்பும், 29 கிலோ தங்கமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு, 2026ஆம் ஆண்டு குடமுழுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் நடைபெறவுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்தாமரை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்தாமரை (ETV Bharat Tamil Nadu)

ராஜகோபுரத்தின் வரலாறு

161 அடி உயரமும் (49.1மீ), 9 நிலைகளும் கொண்ட கிழக்கே உள்ள ராஜகோபுரம் கி.பி.1216 - 1238 மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும், 170 அடி உயரமும் (51.9மீ), 9 நிலைகளும் கொண்ட தெற்கு ராஜகோபுரம் கி.பி.1559 - 1570-ல் வணிகரான சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியாராலும் நிர்மானிக்கப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது.

இதேபோன்று 163 அடி உயரமும் (49.7மீ), ஒன்பது நிலைகளும் கொண்ட மேற்கு ராஜகோபுரம் கி.பி.1374-ல் மல்லப்பன் என்பவராலும், 160 அடி உயரமும் (48.8மீ), 9 நிலைகளும் கொண்ட வடக்கு ராஜகோபுரம் கி.பி.16 - 19ஆம் நூற்றாண்டுகளில் கிருஷ்ண வீரப்ப நாயக்கர் தொடங்கி பின்னர் அமராவதி புதூர் வயிநாகரம் செட்டியாராலும் நிறைவு செய்யப்பட்டது.

இந்த கோபுரம் தான் தற்போது வரை 'மொட்டை கோபுரம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று வெளிப்புறத்தில் உள்ள 4 கோபுரங்கள் உட்பட மொத்தம் மீனாட்சி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மன்னரால் கட்டப்படவில்லை.

அவை சுமார் 700 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக பாண்டிய பேரரசர்கள், நாயக்க மன்னர்கள், செல்வந்தர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டவை. ஆக மொத்தம் மீனாட்சி அம்மன் கோயில் என்பது பல தலைமுறைகளின் கூட்டு பாரம்பரிய சின்னமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் (ETV Bharat Tamil Nadu)

வரலாற்று கலைக்கூடம்

தோராயமாக இக்கோயிலில் 33,000 சிற்பங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாண்டியர், விஜயநகர நாயக்கர் மற்றும் சிற்ப வல்லுநர்களின் கலை மரபை அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப வெளிப்படுத்துகின்றன.

சிவபெருமான் குறித்த நடராஜர், சோமாஸ்கந்தர், பிச்சாடனர், வீரபத்திரர், திரிபுராந்தகர், அர்த்தநாரீஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி சிற்பங்கள், மீனாட்சி அம்மன் குறித்த மீனாட்சி அவதாரம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், திக்கு விஜயம், அஷ்ட சக்திகள் மற்றும் சப்த மாதர்கள் சிற்பங்களும் உள்ளன.

அதேபோன்று திருவிளையாடல் சிற்பங்கள், ராமாயணம், மகாபாரதம், சிவபுராணம், ஸ்கந்த புராணம், பாகவத புராணம் என புராணங்களை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இங்கே உள்ளன. மேலும், ஆயிரம் கால் மண்டபம், கல்வெட்டுகள் ஆகியவை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய கூறுகளாகும்.

இன்று நேற்று முளைத்த மரபு அல்ல

தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் தலைமையிலான குழு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே அமைந்துள்ள கல்வெட்டுகளை படி எடுத்து ஆவணப்படுத்தியுள்ளது. அந்த குழுவின் முக்கிய உறுப்பினரும் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியருமான முனைவர் மீ.மருது பாண்டியன் நமது ஈடிவி பாரத் ஊடத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “'மாயோன் கொப்பூர் மலர்ந்த தாமரை' என்ற சிறப்புக்குரிய மாமதுரை, கோயில்கள் நிறைந்த நகரமாகும். அதில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனை தெய்வமாகக் கொண்ட மீனாட்சியம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றதாகும். இன்னும் சில மாதங்களில் இங்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு இன்று நேற்று முளைத்த மரபு அல்ல. தொடர்ச்சியாக தமிழர் பாரம்பரியங்களில் நிகழக்கூடிய ஒன்று.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் (ETV Bharat Tamil Nadu)

புனித நீராடல் என்று கூடச் சொல்லலாம். பழந்தமிழ் கல்வெட்டுகளில் கும்பாபிஷேகம் தொடர்பாக நிறைய சான்றுகள் காணப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரியங்களை, தொல் மரபுகளை ஆதரிக்கும் விதமாக கிழக்கிந்திய கம்பெனி காலத்திலும் இங்கே கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன” என்கிறார்.

பாண்டியர் காலம் முதல்

மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த மண்ணை ஆளுகின்ற அரசுகளும் மக்களின் மரபுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் நம்பிக்கைகளை ஊக்குவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு தற்போது நடைபெறவுள்ளது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தலைமையிலான எங்கள் குழு தான் முழுவதுமாக ஆவணப்படுத்தியது. கல்வெட்டுகளின் வாயிலாக மீனாட்சி அம்மன் கோயில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு உருவாகி வளர்ந்துள்ளது என்பதை பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா- பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்

பாண்டியர் காலக் கல்வெட்டுகள், நீர் மேலாண்மை தொடர்பான கல்வெட்டுகள், சோழர்கள் உடைய பங்களிப்பு இல்லை என்றாலும் கூட, அந்த காலகட்டத்திலும் இந்த கோயில் சிறப்பித்து விளங்கியுள்ளது என்பதற்கான கல்வெட்டுகள், விஜயநகர நாயக்கர்கள், மதுரை நாயக்க மன்னர்கள், பாளையக்காரர்கள், ஆங்கிலேயர்கள் உட்பட பலரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு மேம்பாட்டினை செய்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் (ETV Bharat Tamil Nadu)

மத நல்லிணக்கத்திற்கு உதாரணம்

சமய பேதங்கள் இன்றி அனைத்து மத நம்பிக்கைகள் கொண்டோர் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடுகின்ற திருவிழாக்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களாக இன்றளவும் உள்ளன. மதுரையில் நடைபெறும் கள்ளழகர் திருவிழா இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அதுபோன்றதொரு சிறந்த நிகழ்வாக தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது என்பதில் எங்களுக்கெல்லாம் மிகப்பெருமை” என்றார்.

மீண்டும் பொலிவுடன்

பக்தர்கள் மட்டுமல்ல... உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்து சமய அறநிலையத் துறையும் குடமுழுக்கிற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. மதுரையின் அடையாளம் 17 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொலிவோடு அருள் தரவிருக்கிறது.