ஐ.நா பெண்கள் அமைப்பு - தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ஐ.நா பெண்கள் அமைப்புடனான ஒப்பந்தம் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.

Published : January 5, 2026 at 8:36 PM IST
சென்னை: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே (UN Women) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாலின சமத்துவத்தின் நோக்கங்கள் நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) ஒன்றிணைந்தவை மற்றும் அனைத்து வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இன்றியமையாதது. ஏனென்றால், பாலின சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவ உணர்வுள்ள ஒரு கட்டமைப்பு மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஐ.நா பெண்கள் அமைப்பு உலகளவில் செயல்படுகிறது.
இந்நிலையில், ஐநா பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையுடனான இந்த ஒப்பந்தமானது, பாலினப் பாகுபாடற்ற ஆளுகை மற்றும் திட்டமிடலுக்கான நிறுவனத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாலின சமத்துவ முன்னோக்குடன் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைதல், பாலினப் பாகுபாடற்ற திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார வலுவூட்டலுக்கான வாய்ப்புகளை பெண்களுக்கு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இவற்றை செயல்படுத்திட ஐநா பெண்கள் அமைப்பு தமிழ்நாடு அரசிற்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல், ஸ்வீடனில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) புத்தாக்க அலுவலகம், உலகளவில் தமிழ்நாட்டினை துணை தேசிய அளவிலான முதல் மாநிலமாக தேர்வுசெய்து, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவுடன் 6 மாத காலத்திற்கான
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) - பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI) மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, மாநில திட்டக்குழு, பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் புதியதாக உருவாக்கப்பட்ட குறிக்காட்டிகளின் தன்மையைக் கருத்தில் கொண்டும், நீடித்த வளர்ச்சி இலக்குகளைக் கண்காணிப்பதில் உலகளாவிய மற்றும் தேசிய அளவில் மாறி வரும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள 2020-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மாநிலக் குறிக்காட்டி வரையறை-1.0-ஐ (SIF-1.0) மறுவரையறை செய்துள்ளது.

தமிழ்நாடு மாநில குறிக்காட்டி வரையறை-2.0 என்ற பெயரில் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த வரையறையில், 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான 244 குறிக்காட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0-ஐயும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்து மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட,
- சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளின் பொருளாதார மதிப்பீடு, தமிழ்நாட்டின் முன்னுரிமை அளிக்கப்பட்ட 61 ஈரநிலங்கள் / நீர்நிலைகள் பற்றிய ஆய்வு
- தமிழ்நாட்டின் புறநகர்ப் பகுதிகளின் அமைப்பு மற்றும் நிலையான புறநகர் மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்துதல்
- முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், பசுந்தாள் உரமிடுதல் மீதான மதிப்பீட்டாய்வு
- தமிழ்நாட்டின் வளர் இளம் பெண்களிடையே நீடிக்கும் இரத்த சோகை - செயல்பாட்டு இடைவெளிகளும், பாதிப்புகளும் ஆகிய 4 அறிக்கைகளை மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

