ETV Bharat / state

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. தாயை கொலை செய்த மகன் கைது

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து விவசாயியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தற்போது தாயையும் கொலை செய்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 5:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: மது அருந்த பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் - பாக்கியம் (60) தம்பதி. இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், சுப்பிரமணியன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தாய் பாக்கியத்துடன் இணைந்து வேலுச்சாமி இளநீர் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

வேலுச்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், அதனால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயாரிடம் தகராறு செய்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதே போல நேற்றும் தனது தயார் பாக்கியத்திடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பாக்கியம் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த வேலுச்சாமி வீட்டில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து தாய் என்றும் பாராமல் தாக்கியுள்ளார்.

அதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியம் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். இருந்தாலும் விடாது அவரை துரத்தி வந்த வேலுச்சாமி, வீட்டின் வெளியே கிடந்த செங்கலை எடுத்து தாக்கியுள்ளார். அதில் வலி தாங்க முடியாமல் அலறிய பாக்கியத்தின் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வரவே, அதனைக் கண்ட வேலுச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள வேலுச்சாமி, கொலை செய்யப்பட்ட பாக்கியம்
கைது செய்யப்பட்ட வேலுச்சாமி, கொலை செய்யப்பட்ட பாக்கியம் (ETV Bharat Tamil Nadu)

மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியத்தை கண்ட உறவினர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாக்கியத்தை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாக்கியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வேலுச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலரை தட்டி தூட்டிய போலீஸ்

முன்னதாக, 2023ஆம் ஆண்டு வேலுச்சாமியின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளத்தை சேர்ந்த முருகன் (42) என்பவருக்கும், அவரது மனைவி பேச்சியம்மாளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, முருகனை வெட்டி கொலை செய்தார். முருகனின் உடலை அங்கேயே விட்டு விட்டு, தலையை மட்டும் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட ராஜாபுதுக்குடியில் உள்ள அவரது மனைவியின் வீட்டின் முன்பு வீசி சென்றார். அந்த சம்பவத்தில் கைதாகி சிறைக்கு சென்ற வேலுச்சாமி, பிணையில் வெளியே வந்த நிலையில் தற்போது தாயையும் கொலை செய்துள்ளார்.

2023-ல் நடந்த கொலை சம்பத்திற்குப் பிறகு சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால், வேலுச்சாமி அதற்கான சிகிச்சை பெற்று, நாள்தோறும் மருந்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று மருந்து எதுவும் சாப்பிடாத வேலுச்சாமி, தாயிடம் மது அருந்த பணம் கேட்டு தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்த போது, ஆத்திரமடைந்த அவர், தனது தாயை கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.