ETV Bharat / state

போதை பொருள் விற்பனை வழக்கில் முக்கிய புள்ளி கைது; 'லுக் அவுட் நோட்டீஸ்' நடவடிக்கையில் சிக்கிய பின்னணி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் இந்த வழக்கில் கைது சம்பவங்கள் நடந்து வருகிறது.

கைதான அமர்
கைதான அமர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 9:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: போதை பொருள் விற்பனை வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போதை பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பதுக்குபவர்கள், வைத்திருப்பவர்கள் அனைவரையும் கண்டறிந்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி திருமங்கலம் பார்க் ரோடு, சரவணா பர்னிச்சர் ஷோரூம் அருகே போதை பொருள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் அங்கு சந்தேகப்படும்படி இருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் LSD ஸ்டாம்பை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில், கைதான நபர் சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த தியானேஸ்வரன் (26) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 LSD ஸ்டாம்ப்புகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவரிடம் போதை பொருள் விற்பனை செய்த சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சரத் (30), ஆந்திராவைச் சேர்ந்த திரைப்பட இணை தயாரிப்பாளர் முகமது மஸ்தான் சர்புதீன் (44), சென்னை முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன் (27) ஆகியோர் கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிராம் OG கஞ்சா, ரூ.27.91 லட்சம் ரொக்கம், 6 செல்போன்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த தினேஷ் (39) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளி ஒருவர் வெளிநாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில் காவல் உயர் அதிகாரிகளின் பரிந்துரைப்பேரில் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளித்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில், அந்த நபர் வந்துள்ளார். அவரை அடையாளம் கண்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையம் விரைந்த திருமங்கலம் போலீசார், அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமர் (30) தெரிய வந்தது. அவரிடமிருந்து ஐபோன் உட்பட இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் இவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது? இவர்கள் யாருக்கெல்லாம் சென்னையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டார்கள்? வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அமர் மீது வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த போதைப் பொருள் வழக்கில் முன்னதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொடர்புடையவர்கள் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ''பொங்கல் சிறப்பு பேருந்துகள்'' - புறப்படும் இடம்... முன்பதிவு மையங்கள் முழு விவரம்