இறுதி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர் நல்லகண்ணு!
கொடுமையான சிறை வாசத்திற்கு பின்னர், வெளியே வந்த நல்லகண்ணு, "இனி தன் வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பதே லட்சியம்" என்று அறிவித்தார்.

Published : February 25, 2026 at 3:13 PM IST
சென்னை: மக்களுக்கான மகத்தான தலைவராக இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு. வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கத்திற்காக ஓய்வறியாமல் உழைத்த மாபெரும் தலைவர் அவர்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தோழரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101. வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
மீண்டும் கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நல்லகண்ணுவின் உடல்நிலை இன்று காலை பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வந்த சிங்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தார். முதலில் காங்கிரஸில் ஆர்வம் காட்டிய அவர், தனது 18வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டதில் ஈடுபட்டார். அப்போது நாடு முழுவதும் பெரும் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. ஆனால், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு நிலச்சுவான்தார் சுமார் 2,000 நெல் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி இதழில் எழுதினார். இதனை படித்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இந்த சம்பவம், நல்லகண்ணுவின் போராட்ட குணத்தை பட்டைத் தீட்டியது.
நாட்டின் சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவர் நல்லகண்ணு. அவர் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கொடுமையான சிறை வாசத்திற்கு பின்னர், வெளியே வந்த அவர், இனி தன் வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பதே லட்சியம் என்று அறிவித்தார்.
ரூ. 1 கோடியை திருப்பி கொடுத்த போராளி
நல்லகண்ணுவின் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு அவரின் 80 ஆவது பிறந்த நாளுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிகப் பெரிய விழா நடத்தப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் இருந்து திரட்டப்பட்ட ஒரு கோடி ரூபாய் அவரிடம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அந்த மேடையில் வைத்தே கட்சிக்கு திருப்பி கொடுத்தார்.
அதேபோன்று தமிழக அரசு கடந்த 2007ஆம் ஆண்டு அவருக்கு அம்பேத்கர் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் அளித்தது. அதில் பாதி தொகையை கட்சிக்கும், மீதி தொகையை விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் பகிர்ந்து அளித்தார்.
| இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார் |
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கும், தமிழனத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர்களை பெருமைப்படுத்த 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் விருது வழங்க தொடங்கியது. முதல் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவதாக 2022-ம் ஆண்டு நல்லகண்ணுக்கு வழங்கப்பட்டது. சான்றிதழுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு மேடையிலேயே அளித்தார்.
தேர்தலில் போட்டி
சில முறை தேர்தலில் நல்லக்கண்ணு போட்டியிட்டிருந்தாலும், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. குறிப்பாக, 1999-ல் கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நல்லகண்ணு, தற்போது குடியரசுத் துணை தலைவரும், அப்போதைய கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.

