ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.. தாய் கண் முன்னே நேர்ந்த சோகம்
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 20 அடி ஆழம் கொண்ட ஏரியில் சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

Published : January 3, 2026 at 7:56 PM IST
திருப்பத்தூர்: தாய் கண் முன்னே அவரது 5 வயது மகன் ஏரியில் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பணியாண்டப்பள்ளி அடுத்த வாலூர் பகுதியை சேர்ந்தவர் மணி - சத்யா தம்பதி. இவர்களுக்கு பிரியதர்ஷினி (13) எஸ்மிதா (8) என்ற இரண்டு மகள்களும், சரண் (5) என்ற மகனும் உள்ளனர். சத்யா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம்போல இன்றும் (ஜன.3) வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் தனது மூன்று குழந்தைகளுடன் பீடி சுற்றும் பணியில் சத்யா ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது ஏரிக்கரையில் அமர்ந்து பிரியதர்ஷினி அவரது தம்பி சரணுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, சரண் எதிர்பாராத விதமாக 20 அடி ஆழம் கொண்ட ஏரியில் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்ட பிரியதர்ஷினி, தம்பியைக் காப்பாற்றும் நோக்கில் ஏரியில் குதித்துள்ளார்.
அதைப் பார்த்த அவர்களது தாய் சத்யா அலறி அடித்துக் கொண்டு முதலில் மகளை மட்டும் காப்பாற்றியுள்ளார். ஆனால், மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், கதறி அழுதுள்ளார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்த பொதுமக்கள், ஏரியில் மூழ்கிய சரணை சடமாக மீட்டனர். அப்போது, உயிரிழந்த சிறுவன் உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல்நிலைய போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

