ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு – தீயணைப்பு துறையினர் பிடியில் சிக்கியது எப்படி?

மீட்கப்பட்ட நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் அருகிலுள்ள காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 8:19 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: அரக்கோணம் அரசு மருத்துவமனையில் திரிந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு அருகிலுள்ள காப்புக் காட்டில் விடுவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனைக்கு, அரக்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு கட்டடம் அருகே நல்ல பாம்பு ஒன்று சுற்றி வருவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கவனித்துள்ளனர்.

இதையடுத்து இந்த தகவல் மருத்துவமனை முழுவதும் காட்டுத் தீ போல் பரவி, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 30 நிமிடங்கள் தீவிர முயற்சிக்குப் பின் அந்த நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர்.

பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டதை அறிந்ததும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மீட்கப்பட்ட நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் அருகிலுள்ள காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில்,“அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நல்ல பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்த உடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது, பாதுகாப்பே முதன்மை. சுமார் 30 நிமிடங்கள் கவனமாக செயல்பட்டு பாம்பை எந்தவித சேதமும் இன்றி பத்திரமாக மீட்டோம். பின்னர் அதை அதன் இயற்கை சூழலான அருகிலுள்ள காப்புக் காட்டில் விடுவித்தோம். பொதுமக்கள் இதுபோன்ற நேரங்களில் பீதி அடையாமல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

மேலும், இது குறித்து பேசிய கண்ணன் என்பவர், “மருத்துவமனை வளாகத்தில் பாம்பு இருப்பதாக தெரிந்ததும் அனைவருக்கும் பயம் ஏற்பட்டது. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் என பலரும் இருந்ததால் மிகுந்த பதற்றம் நிலவியது. ஆனால் தகவல் அளித்தவுடன் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து திறம்பட செயல்பட்டு பாம்பை பாதுகாப்பாக மீட்டனர். அவர்களின் துரித நடவடிக்கையால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்றனர்.