ETV Bharat / state

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-II: 1.60 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு

நேற்று நடைபெற்ற டெட் முதல் தாள் தேர்வை எழுத 61,386 தேர்வர்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 59,535 (96.99 சதவீதம்) ஆசிரியர்கள் தேர்வை எழுதினர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 5, 2026 at 4:43 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வில் 96.99% ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு டெட் தேர்வு இரண்டு தாள்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. முதல் தேர்வு தாள் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற நிலையில், இரண்டாம் தாள் இன்று (ஜூலை 5) நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 38 மையங்களில் 10,251 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை தந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

தேர்வு மையத்திற்கு வந்த ஆசிரியர்கள் பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் அணிந்து வந்திருக்கின்றனரா? என காவல்துறையினர் சோதனை செய்தபின் அவர்களை தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். தேர்வர்களின் ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டன.

இதையும் படிங்க:உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை - பள்ளிக் கல்வித்துறை செயலாளர்

இத்தேர்வை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், தேர்வு அறையில் நடைபெறும் அனைத்து தகவல்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து கண்காணிக்கும் முறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 613 மையங்களில் 1,67,743 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 1,60,929 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள் II-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.

இதனிடையே நேற்று நடைபெற்ற டெட் முதல் தாள் தேர்வை எழுதி 61,386 தேர்வர்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 59,535 (96.99 சதவீதம்) ஆசிரியர்கள் தேர்வை எழுதினர்.